தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.60லட்சம் கோடி நிலுவைத் தொகையை செலுத்த 10 ஆண்டு கால அவகாசம்
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் எனப்படும் ஒரு லட்சத்து 60ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான நிலுவைத் தொகையை செலுத்த உச்ச நீதிமன்றம் 10 ஆண்டு கால அவகாசம் வழங்கி உள்ளது.
வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 2031 மார்ச் 31 வரையிலான காலகட்டத்திற்குள் படிப்படியாக அந்த நிலுவைத் தொகையை வழங்கினால் போதுமானது என நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
அதே நேரம் இந்த தொகையில் 10 சதவிகிதத்தை வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் செலுத்துமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஏஜிஆர் நிலுவைத் தொகையை வசூலிக்க 20 ஆண்டு கால அவகாசம் வழங்கலாம் என்ற மத்திய அரசு மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
Comments