சந்துரு… சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே..! 22 ஐ கவர்ந்த 38

0 36277

5 கணவன்களை தவிக்க விட்டு 6 வதாக 22 வயது இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 38 வயது பெண் ஒருவர், பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். 5 கணவன்களும் போலீசில் ஆஜராகி அந்த பெண்ணுக்கு போட்டி போட்ட நிலையில் 6 வது கணவர் தட்டிச்சென்ற சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

நடிகர் வடிவேலு நடித்த சினிமா ஒன்றில் 5 கணவனை மணந்த பெண் ஒருவர் 6 வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடையும் காமெடிக்காட்சி மிகவும் பிரபலம். அதே பாணியில் கர்நாடக மாநிலத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

சிக்மகளூரு மாவட்டம் கம்பி ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 22 வயதான சந்துரு, இவர் 38 வயதுடைய பிரியா என்ற பெண்ணிடம் ஆண்டி உறவு முறையில் பழகி வந்துள்ளார். சில தினங்களில் அந்த பெண்ணுடன் காதல் வசப்பட்ட சந்துரு அண்மையில் வீட்டை விட்டு வெளியேறி அந்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார்.

வழக்கமாக காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இவர்களின் காதல் திருமணத்துக்கு பெண்ணுக்கு வேண்டியவர்கள் என 5 பேர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தங்கள் உயிருக்கு ஆபத்து என்று சந்துரு தனது 38 வயது மனைவியுடன் பாதுகாப்பு கேட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

சந்துருவுக்கும், அந்த பெண்ணுக்கும் பெற்றோர் இல்லாத நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 5 பேரும் யார் என்று விசாரித்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் 5 பேரும் அந்த ஆண்டி ஹீரோயினுடன் காதல் டூயட்பாடி திருமணம் செய்து கொண்ட கணவன்மார்கள் என்பதும், அவர்களில் ஒருவருக்கு 2 குழந்தைகளை பெற்றுக் கொடுத்துவிட்டு அந்த பெண் தப்பி வந்ததும் தெரியவந்தது.

ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய அந்த பெண் தற்போது ஆறாவதாக இளைஞர் சந்துருவை தனது காதல் வலையில் சிக்கவைத்து திருமணம் செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. இத்தனை விவரங்கள் தெரிந்தும், இளைஞர் சந்துருவோ தனக்கு அவர்தான் வேண்டும் என்று அடம்பிடித்ததால் என்ன முடிவுக்கு வருவது என்று தெரியாமல் காவல்துறையினர் குழம்பினர்.

ஒரு கட்டத்தில் இருவரும் மேஜர் என்பதால் காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்று பேசி முடித்துக் கொள்ளுங்கள் என்று போலீசார் வெளியே அனுப்பி வைத்தனர்.

உன் வயதுக்கேற்ற பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என சந்துருவின் உறவினர்கள் சிலர் அறிவுரை வழங்கிய போதும் தனக்கு பெட்ரமாஸ் லைட்டு தான் வேண்டும் என்ற ரீதியில் சந்துரு காதலில் பிடிவாதமாக இருந்தான். இதற்கிடையே அந்த பெண்ணிடம் செல்போனில் உள்ள தங்கள் பழைய திருமண புகைபடங்களை காட்டி ஒரு கணவர் மனதை மாற்ற முயல அதற்கு அந்தப்பெண் அசைந்து கொடுக்கவில்லை..!

பின்னர் அந்த 5 பேரும் தன்னுடன் தான் அந்த பெண் வர வேண்டும் என்று ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்த நிலையில், மீசை முளைக்காத காதலன் சந்துரு மீது கொண்ட ஆசையால் அந்தப்பெண் 5 பேரையும் கழட்டிவிட்டு 6 வது கணவருடன் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அதே நேரத்தில் ஏமாற்றப்பட்ட கணவன்மார்களோ விவாகரத்து பெறாமல் அடுத்தவரை ஏமாற்றி திருமணம் செய்தது தவறு என்றும் இதற்காகவே அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்து விட்டு ஏமாற்றத்துடன் இடத்தை காலி செய்தனர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments