முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்..!
குடியரசு முன்னாள் தலைவரும், நீண்ட கால அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரருமான பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84..
டெல்லி ராஜாஜி மார்கில் உள்ள வீட்டில் மயங்கி விழுந்ததை தொடர்ந்து டெல்லி கண்டோன்ட்மென்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜி சேர்க்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த 10 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது.
அப்போது நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியானது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்பாத நிலையில், தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் பிரணாப் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
வென்டிலேட்டரில் இருந்தாலும், அவருக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இன்று காலை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் பிரணாப்பின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரணாப் காலமாகி விட்டதாக மாலை 5.36 மணிக்கு அவரது மகன் அபிஜித் முகர்ஜி டுவிட்டரில் தெரிவித்தார்.
50 ஆண்டுகள் தீவிர காங்கிரஸ்காரராகவும், 7 முறை எம்பியாகவும், பலமுறை மத்திய அமைச்சராகவும் இருந்து, அரசியல் வாழ்வின் இறுதியில் குடியரசு தலைவராகவும் இருந்த பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி மறைந்து விட்டார்.
Comments