பிரசாந்த் பூசனுக்கு 1 ரூபாய் அபராதம்..!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு, உச்சநீதிமன்றம் 1 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ட்விட்டரில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதியை விமர்சித்த வழக்கில் பிரசாந்த் பூசன் குற்றவாளி எனக் கூறிய நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷனுக்கு அவகாசம் வழங்கியிருந்தது.
மன்னிப்பு கேட்க முடியாது என முதலிலேயே தெரிவித்து விட்ட அவர், தம்முடைய மனசாட்சிக்கு விரோதமாக மன்னிப்பு கேட்க முடியாது என பதில் மனுவும் தாக்கல் செய்தார். கடந்த 25ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் மன்னிப்பு கேட்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டில் பூஷன் உறுதியாக இருந்ததால், தண்டனை விவரங்கள் அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தை அவமதித்ததற்காக 1 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த 1 ரூபாய் அபராதத்தை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் செலுத்த கெடுவிதித்தனர்.
தவறினால் 3 ஆண்டு சாதாரண சிறைத் தண்டனையை பிரசாந்த் பூஷன் அனுபவிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இதனிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாகவும், உத்தரவுப்படி 1 ரூபாய் அபராதத்தை தன்னுடைய வழக்கறிஞர் ராஜீவ் தவான் மூலம் செலுத்தி விட்டதாகவும் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பிரசாந்த் பூசண் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தையோ, நீதித்துறையையோ அவமதிக்கும் உள்நோக்கத்தில் தான் கருத்து வெளியிடவில்லை என்றும், அது தனது வேதனையின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகளுக்கும் தனக்கும் இடையிலானது இல்லை என்றும், உச்சநீதிமன்றத்துக்கும் தனக்கும் இடையிலானது என்றும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஆதரவளித்த முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்கள், எண்ணற்ற பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments