தோனியுடன் ரெய்னா மோதல்... எத்தகைய நட்பு அற்ப பிரச்னைக்காகவா உடைந்தது?

0 56700
தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா ஐ.பில்.எல் போட்டிகளில் விளையாட ஐக்கிய அமீரகத்துக்குச் சென்ற நிலையில் திடீரென்று நாடு திரும்பினார். அவர் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியதற்குக் காரணம் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மாமா அசோக்குமார் என்பவரின் மரணம் தான் என்று தகவல் வெளியானது.

ஆனால், அசோக்குமார் 19 - ம் தேதி இறந்த நிலையில் 21 - ம் தேதி சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே அணியுடன் துபாய் சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உறவினர் இறந்து 10 நாள்கள் கழித்து நாடு திரும்பினார். இதை அடிப்படையாக வைத்து, சுரேஷ் ரெய்னா போட்டித் தொடரிலிருந்து வெளியேறியதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கும் என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில் தான் சி.எஸ்.கே அணி நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர் தோனியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் கருத்து மோதல் காரணமாகவே சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே அணியிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் அணியில் கலந்துகொள்ளும் மற்ற அணிகள் அனைத்தும் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் சென்னையில் ஒருவாரம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பயிற்சி முடிந்த பிறகே சி.எஸ்.கே அணி  21 - ம் தேதி துபாய் சென்றது. அங்கு ஒரு வார காலம் வீரர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். அதன்பிறகு 28 - ம் தேதி கொரோனா நோய்ப் பரிசோதனை செய்த போது 13 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த ரெய்னா, சென்னையில் ஒரு வாரம் தங்கி பயிற்சி மேற்கொண்டது தான் கொரோனா பிரச்னைக்குக் காரணம் என்று அணி நிர்வாகத்திடமும் தோனியிடமும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரத்தில் தோனிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் முடிவில் தான் சுரேஷ் ரெய்னா போட்டித் தொடரிலிருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 15 - ம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தபோது அவருடன் சேர்ந்து ஓய்வை அறிவித்தவர் சுரேஷ் ரெய்னா. இந்த நிலையில் தோனியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சுரேஷ் ரெய்னா போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இனி சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே அணியுடன் விளையாடுவதும் சந்தேகம் தான் என்கிறார்கள்!

Friendship Day: MS Dhoni Receives A Heartfelt Message From Suresh Raina |  Cricket News

ரெய்னா நடந்து கொண்ட விதம் சி.எஸ்.கே. அணி உரிமையாளர் சீனிவாசனுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரெய்னா வெளியேறியது குறித்து சீனிவாசன் கூறுகையில், ”சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதும் ஒரு குடும்பம் போல. அனைத்து மூத்த வீரர்களும் எப்படி ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பதை எங்கள் வீரர்கள் அறிந்தவர்கள். உங்களுக்கு தயக்கம் இருந்தால், மகிழ்ச்சியாக இல்லை என்றால் சென்று விடுங்கள். நான் யாரையும் எதையும் செய்யுமாறு வற்புறுத்த மாட்டேன். சில சமயம் வெற்றி உங்கள் தலைக்குள் ஏறி விடும்'' என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் தோனி - சுரேஷ் ரெய்னா நட்பு வெகு பிரசித்தம். இந்திய அணியில் தோனி கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில் சுரேஷ் ரெய்னாவுக்கு முக்கிய இடம் கொடுத்து வைத்திருந்தார். அதே போல, சி.எஸ். கே அணியிலும் துணை கேப்டன் பதவியில் ரெய்னா இருந்தார். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு அறிவித்த அடுத்த நாளே ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்தது இருவருக்குமுள்ள நட்பை வெளிக்காட்டும் விதத்தில் இருந்தது. ஆனால், இப்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை. தோனி ரெய்னாவுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் 12 சீசன்களில் 9 சீசன்களில் 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. ஒட்டு மொத்த சீசன்களில் 5,368 ரன்களைக் குவித்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் சுரேஷ் ரெய்னா 2வது இடம் பெற்றுள்ளார். ரெய்னாவின் சராசரி 33.34, ஸ்ட்ரைக் ரேட் 137.14 ஆகும். ஐ.பி.எல் தொடரில் ஒரு சதம் மற்றும் 38 அரை சதங்களையும் சுரேஷ் ரெய்னா அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments