புதுமையான பொம்மைகளைச் செய்ய நிறுவனங்களுக்கு வேண்டுகோள்
உலகச் சந்தையில் விற்பதற்காக உள்நாட்டில் பொம்மைகளைத் தயாரிக்க அனைவரும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும் என்றும், குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் பொம்மைகளைச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மனத்தின் குரல் என்னும் பெயரில் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். 68ஆவது முறையாக இன்று உரையாற்றிய அவர், கொரோனா சூழலால் தூய்மை, இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட ஒழுக்க உணர்வுகள் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இயற்கைக்கும் நமது விழாக்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளதைக் குறிப்பிட்ட அவர், இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காக்கும் உணர்வை விழாக்கள் தூண்டுவதாகத் தெரிவித்தார். குழந்தைகளைப் பற்றி எண்ணியபோது, பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவது பற்றியும் விவாதித்ததாகக் குறிப்பிட்டார்.
குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் சிறந்த பொம்மைகள் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். புதிய கல்விக்கொள்கையில் விளையாட்டுக்களின் ஊடேயே கற்றல், விளையாட்டுப் பொருட்கள் உருவாக்குவதைக் கற்றல், விளையாட்டுப் பொருட்கள் செய்யப்படும் இடங்களுக்குச் செல்லுதல் ஆகியவை பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பொம்மைகள் உற்பத்தி மையங்களாகத் திகழ்வதாகத் தெரிவித்தார். உலக அளவில் பொம்மைகள் தயாரிப்புத் தொழில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது என்றும், அதில் இந்தியாவின் பங்கு மிகச் சிறியது என்றும் குறிப்பிட்டார். முழு உலகுக்கும் பொம்மைகள் தயாரிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளதாகவும், புதிய நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து புதுமையான பொம்மைகளைத் தயாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க நூறாண்டுகளுக்கு முன் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் வித்திடப்பட்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பில் சிறப்பாகப் பணியாற்றிய சோஃபி, விதா என்கிற நாய்களுக்குப் பாராட்டு அட்டைகள் வழங்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்ட நாட்டு நாய்கள் திறமையானவை என்றும், அவற்றின் பராமரிப்புக்கு அதிகச் செலவாவதில்லை என்றும் தெரிவித்தார்.
செப்டம்பர் 5ஆம் நாள் ஆசிரியர் நாளையொட்டி விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு மாணவர்களை ஆசிரியர்கள் அழைத்துச் சென்று காட்டலாம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Comments