ஆனந்த நடனமாடிய இரு பாம்புகளை கையால் பிடித்த வில்லேஜ் விஞ்ஞானி...! வேடிக்கை பார்த்தவர்கள் அலறல்
கோயம்புத்தூர் அருகே வயல் காட்டில் ஆனந்த நடனமாடிய இரு பாம்புகளை விவசாயி ஒருவர் அனாசயமாக கையால் பிடித்து தூக்கிச்சென்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் படத்தில் வருவது போல கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வயல்காட்டில் இரு பாம்புகள் பின்னிப் பிணைந்து ஆனந்த நடனமாடிக் கொண்டு இருந்தன.
அந்த பாம்புகளின் நடனத்தை அங்கிருந்தவர்கள் தொலைவில் நின்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வில்லேஜ் விஞ்ஞானி ஒருவர் தைரியமாக பாம்புகளை நோக்கிச்சென்றார். மெரீனா காதல் ஜோடிகள் போல மெய் மறந்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த அந்த இரு பாம்புகளின் காதலையும் கைகளால் கலைக்க முயன்றார்.
சீற்றத்துடன் காணப்பட்ட இரு பாம்புகளின் தலை பகுதியையும் ஒரு கைக்குள் வைத்து இறுக்கி பிடித்து தூக்கிய அவர் வேலிக்குள் புகுந்து அதனை அப்படியே வேடிக்கைப் பார்த்தவர்களை நோக்கி எடுத்து வந்தார். அவரது இந்த தில்லான செயலை பார்த்த கூடியிருந்தவர் அலறியபடியே விலகிச்சென்றனர்.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள், விவசாயிகளின் தைரியத்திற்கு முன்னால் அந்த பாம்புகளே இங்கே நடுங்கிக் கொண்டிருக்கின்றது. வயல் காட்டில் பயிர்களை வேட்டையாடும் எலிகளை வேட்டையாடும் பாம்புகள் விவசாயிகளின் தோழன் என்பதால் அவர் அந்த இரு பாம்புகளையும் ஒன்றும் செய்யாமல் விடுவித்தார்.
பாம்புகள் மனிதனாக மாறி காதலிப்பது, விரதம் இருப்பது, விரட்டி விரட்டி பழிதீர்ப்பது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியமாககூடிய கற்பனை..! நிஜத்தில் மனிதனை கண்டால் விட்டால் போதும் என்று தூர விலகிச்செல்லும் சாதாரண உயிரினம் அவ்வளவுதான்.
Comments