மோதல் முற்றியதால் ‘எபிக் கேம்ஸ்’ கணக்கை ப்ளே ஸ்டோரிலிருந்து அழித்தது ஆப்பிள் நிறுவனம்!
அமெரிக்காவில் புகழ் பெற்ற போர்ட்நைட் விளையாட்டின் தாய் நிறுவனமான ’எபிக் கேம்ஸ்’ கணக்கை நிரந்தரமாக ப்ளே ஸ்டோரிலிருந்து அழித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
போர்ட்நைட் எனப்படும் ஆன்லைன் வீடியோ கேம் ‘எபிக் கேம்ஸ்’ நிறுவனத்தால் 2017 - ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து நேரடியாகத் தறவிறக்கம் செய்து பயனர்கள் விளையாடிவந்தனர். பப்ஜி, ப்ரீபயரைப் போன்று ஆன்லைனில் நான்கு பேர் வரை விளையாடும் இந்த விளையாட்டை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டரை கோடி பேர் விளையாடி வந்தனர். 2019 - ம் ஆண்டு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 13,000 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டியது எபிக் கேம்ஸ் நிறுவனம்.
வழக்கமாக ஆன்லைன் விளையாட்டுகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும்போது, ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்டிராய்டு உள்ளிட்ட இயங்குதளங்கள் வழியாகத் தான் பணம் செலுத்த வேண்டும். இந்தத் தொகையில் 30 சதவிகிதத்தை இயங்குதளங்கள் எடுத்துக்கொண்டு மீதியுள்ள 70 சதவிகிதத்தை செயலியின் நிறுவனங்களுக்கு வழங்குவார்கள். ஆனால், எபிக் கேம்ஸ் நிறுவனம் இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் நேரடியாக வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள். இரு நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக மோதல் இருந்துவந்த நிலையில் போர்ட்நைட் விளையாட்டை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து, எபிக் கேம்ஸ் நிறுவனம் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதே, ஆப்பிள் நிறுவனம் எபிக் கேம்ஸ் நிறுவனத்தின் கணக்குகளை நிரந்தரமாக ப்ளே ஸ்டோரிலிருந்து அழித்துள்ளது.
Comments