இந்திய டாக்டருக்கு சீனாவில் வெண்கலச் சிலை!
சீனாவில் தன்னலம் கருதாமல் சேவையில் ஈடுபட்ட இந்தியாவை சேர்ந்த டாக்டர். துவாரகாந்த் கோட்னிஸ்க்கு வெண்கலச் சிலை திறக்கப்படவுள்ளது.
கடந்த 1938 - ஆம் ஆண்டு சீனா - ஜப்பான் நாடுகளுக்கிடையே போர் உருவானது. அந்த சமயத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சீன ராணுவத்தினருக்கு உதவ 5 மருத்துவர்கள் அடங்கிய குழு இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ஒருவர்தான் துவாரகாந்த் சாந்தாராம் கோட்னிஸ்.
மகராஸ்டிர மாநிலம், ஷோலாப்பூரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கோட்னிஸ் மும்பையில் மருத்துவம் பயின்றார். சீனாவுக்கு 29 வயதில் சென்ற கேட்னிஸ் 5 ஆண்டுகள் அங்கேயே தங்கி சேவை புரிந்தார். ஆம்புலன்ஸில் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று காயமடைந்து கிடக்கும் ராணுவ வீரர்களை மீட்டு சிகிச்சையளித்தார். 1940-ல் போர் கடுமையாக நடந்துகொண்டிருந்தபோது, தொடர்ச்சியாக 13 நாள்கள் சரியாக உறக்கம் கூட இல்லாமல் 588 அறுவை சிகிச்சைகளை கோட்னிஸ் மேற்கொண்டுள்ளார்.
சீனாவை சேர்ந்த ஹோ ஜிங்லான் என்ற பெண்ணையும் மணந்து கொண்டார். கோட் னிஸ் பிறந்தது இந்தியாவாக இருந்தாலும் சீன மக்கள் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். கடந்த 1939 - ஆம் ஆண்டு சீனாவை உருவாக்கிய மசேதுங் தலைமயிலான 8- வது படை பிரிவில் இணைந்தார். தொடர்ச்சியான பணியால் உடல் நலம் குன்றிய கோட்னிஸ், 1942 ஆம் ஆண்டு தன் 32 வது வயதிலேயே இறந்து போனார்.
துவராகாந்தின் மறைவு சீனாவை தோற்றுவித்த மாசேதுங்குவுக்கு பெரும் துயரத்தை கொடுத்தது, ”சீன ராணுவம் முக்கியமான உதவும் கரத்தை இழந்து விட்டது. ஒரு நல்ல நட்பை சீன நாடு இழந்து விட்டது'' என்று மாசேதுங் அப்போது வேதனை தெரிவித்திருந்தார்.
துவாரகாந்த் சாந்தாராம் கோட்னிஸின் சேவையைப் பாராட்டி, சீனாவின் ஹேபே மாகாணத்தில் அவர் பணிபுரிந்த நகரமான ஷிஜாசூவாங்கிலுள்ள மருத்துவக் கல்லூரிக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கல்லூரிக்கு முன் துவாரகாந்தின் சிலை வரும் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்படவுள்ளது.இனிமேல், இந்த கல்லூரியில் சேரும் முதல் வருட மாணவர்கள் துவாரகாந்தின் சிலை முன்பு நின்று உறுதி மொழி ஏற்பார்கள் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் மூதாதையருக்கு ஆண்டுதோறும் மரியாதை செய்யும் சிங்மிங் பண்டிகையின்போது, ஷிஜாசூவாங் நகரத்திலுள்ள கோட்னிஸின் கல்லறையில் சீன மக்கள் மலர் வைத்து மரியாதை செலுத்துகின்றனர். சீனாவுக்காக தன்னலமில்லாமல் பங்களிப்பைப் தந்த முதல் 10 வெளிநாட்டவர்கள் வரிசையில் கோட்னிசும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
Comments