பெண் கொசுக்களை உறவாடி ஏமாற்றும் மலட்டுத்தன்மையுள்ள ஆண் கொசுக்கள்... டெங்குவை ஒழிக்க சிங்கப்பூர் புது முயற்சி!
மரபணு மாற்றப்பட்ட, மலட்டுத்தன்மையுள்ள ஆண் கொசுக்களைக் காற்றில் பரவவிட்டு டெங்கு, ஜிகா போன்ற கொடிய நோய்களைப் பரப்பும் பெண் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளது.
மிகச்சிறிய தீவான சிங்கப்பூரில் மொத்தம் 57 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆனால், இங்கு ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 26,000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொசுக்களைக் கட்டுப்படுத்த புது முயற்சியில் இறங்கியுள்ளது சிங்கப்பூர்.
பொதுவாக, ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்காது. முட்டைகளை உற்பத்தி செய்ய இரத்தம் தேவை என்பதால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சி எடுக்கின்றன. பெண் கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் சமயத்தில்தான் டெங்கு, ஜிகா போன்ற வைரஸ் கிருமிகளையும் மனிதர்களுக்குப் பரப்புகின்றன.
எனவே, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்தியை கையாண்டு வருகின்றன உலக நாடுகள். அதன்படி ஆண் கொசுக்கள் ஆய்வகத்தில் வளர்க்கப்படுகின்றன. இந்தக் கொசுக்கள் வோல்பாசியா என்ற பாக்டீரியாவால் தாக்கச் செய்து மரபணு மாற்றப்பட்டு, மலட்டுத் தன்மையுள்ளதாக மாற்றப்படுகிறது. மரபனு மாற்றப்பட்ட கொசுக்கள் காற்றில் விடப்பட்டு பெண் கொசுக்களுடன் பழக விடப்படுகின்றன. அப்போது, பெண் கொசுவுடன் மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசு உறவில் ஈடுபட்டாலும் முட்டை பொரிக்க முடியாது.
அதோடு, மலட்டுக் கொசுக்களின் உடலில் உள்ள புரதம் பெண் கொசுக்ளுக்குள் சென்று மனிதர்களைக் கடிக்கும் நிலையை அடையும் முன்பே அவற்றைக் கொன்றுவிடும். அப்படியே பெண் கொசுக்கள் முட்டையிட்டாலும் அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்காது. ஆனால், பூக்களிலுள்ள தேனை மட்டுமே அருந்தும் ஆண் கொசுக்கள் தொடர்ந்து வாழ்ந்து அதன் மரபணுக்களைப் பரப்பிக்கொண்டே இருக்கும். இந்த முறையின் மூலம், காலப்போக்கில் ஆபத்தை ஏற்படுத்தும் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களின் அளவைக் குறைத்து அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்ப் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
சிங்கப்பூரைப் போலவே ஆஸ்திரேலியா நோய்களைப் பரப்பும் பெண் கொசுக்களைக் கட்டுப்படுத்த ஆய்வகத்தில் உருவான மலட்டுத் தன்மையுள்ள ஆண் கொசுக்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி தற்போது அமெரிக்காவும் 70 கோடிக்கும் அதிகமான கொசுக்களை ஆய்வகத்தில் வளர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.
Comments