ஆன்லைனில் வீடியோ கால்... சபல கேஸ்களை எச்சரிக்கும் காவல்துறை!
சமூக வலைதளம் மூலமாகப் பழகி சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரியிடத்தில் பண மோடி செய்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை, தியாகராய நகரைச் சேர்ந்தவர் நவீன். இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. தொடக்கத்தில் ஹாய், ஹலோ, எப்படி இருக்கிறீர்கள் என்று பேசத்தொடங்கிய இருவரும் தொலைபேசி எண்களைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளனர். தொலைபேசி எண்களைப் பகிர்ந்துகொண்டதோடு மட்டும் நவீன் நின்றிருந்தால் பிரச்னை இருந்திருக்காது.
ஃபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணின் கட்டாயத்தின் பேரில் வைபர் செயலியை நிறுவி, இருவரும் வீடியோ கால் செய்து பேசியுள்ளனர். வீடியோ காலில் பேசிய அந்தப் பெண் தன் ஆடைகளைக் கழற்றியுள்ளார். தொடர்ந்து நவீனையும் தன்னை போல மாறும்படி கூறியுள்ளார். நட்பு இப்படியாக சென்றுகொண்டிருக்கையில் ஒரு நாள் நவீனிடம் அந்தப் பெண், “நீ நிர்வாணமாக வீடியோ கால் பேசியதை ரெக்கார்டு செய்துள்ளேன். உன் அந்தரங்கம் வெளியாகாமல் இருக்கவேண்டும் என்றால் ஆயிரம் யூரோ பணம் கொடு” என்று மிரட்டியுள்ளார்.
பெண்ணின் மிரட்டலுக்குப் பயந்த நவீன் இந்திய ரூபாய் மதிப்பில் 80,000 வரை அந்தப் பெண் கொடுத்த வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்தப் பெண் மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்ட தான் நிஜமாகவே புலிவாலைப் பிடித்திருப்பதை உணர்ந்த நவீன், மானம் போனாலும் பரவாயில்லை என்று சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார். நவீனின் புகாரையடுத்து காவல் துறையினர் ஆன்லைனில் ஆபாசமாக மோசடி செய்யும் அந்தப் பெண்ணைத் தேடி வருகிறார்கள்.
நவீனைப் போலவே நூற்றுக்கணக்கானோர் தற்போது சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த மோசடியில் ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்கள் நிறைய பேர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன் பின் தெரியாதவர்களுடன் பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர் போன்ற சமூக வலைத்தளங்களில் பழகினால் நவீனைப் போலத்தான் பணத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர் காவல் துறையினர்.
Comments