சினிமாவில் அளவுக்கதிகமாகப் புழங்கும் போதைப்பொருள்... பிரபலங்களைக் குறிவைக்கும் போலீஸ்!
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை நாடு முழுவதும் அதிர்வலையை உருவாக்கியது. சுஷாந்த் சிங்கின் தற்கொலை வழக்கு மும்பை போலிசாரிடமிருந்து சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு வழக்கு விசாரணை வேகம் பிடித்துள்ளது. நெப்போடிசம் எனப்படும் சினிமா வாரிசுகளின் ஆதிக்கம் தான் சுஷாந்த் சிங்கின் மரணத்துக்குக் காரணமாகக் கூறப்பட்ட நிலையில், இப்போது பொதைப் பொருள் பயன்பாட்டை நோக்கி வழக்கு திசை திரும்பியுள்ளது.
சுஷாந்த் சிங்கின் காதலி ரியாவின் அழிக்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலிசார் விசாரணையின் போது ரியா, “சுஷாந்துக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்தது. அதிலிருந்து சுஷாந்தை மீட்க பெரும் முயற்சி மேற்கொண்டேன்” என்று கூறியிருந்தார். இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது.
இந்த நிலையில் தான் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத், “போதைப் பொருளான கொக்கைன் பாலிவுட் வீடுகளில் நடக்கும் அனைத்து மது விருந்துகளிலும் தாராளமாகக் கிடைக்கும். விலையுயர்ந்த கொக்கைன் போதைப்பொருளை பார்ட்டிகளுக்கு முதலில் சென்றால் இலவசமாகவே கொடுப்பார்கள். சில நேரங்களில் எம்.டி.எம்.ஏ எனப்படும் போதை மாத்திரையைத் தண்ணீரில் கலந்து உங்களுக்கே தெரியாமல் கொடுத்துவிடுவார்கள். ரத்த பரிசோதனை நடத்தப்பட்டால் முன்னணி ஹீரோக்கள் பலர் கம்பியெண்ணுவார்கள்” என்று டுவிட்டரில் கூறியிருந்தார்.
பாலிவுட்டில் போதைப் பொருள்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுவது குறித்த செய்தி பரபரப்பைக் கிளப்பிய வேளையில்தான் பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்ற அனிகா எனும் பெண் உள்பட மூன்று பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 145 எம்.டி.எம்.ஏ போதை மாத்திரைகள் மற்றும் 180 எல்.எஸ்.டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிகா உள்பட மூன்று பேரும் ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து போதை மாத்திரைகளை வாங்கி சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மூன்று பேரும் யார் யாருக்குப் போதைப் பொருளை விற்றுள்ளனர் என்ற விவரத்தை இப்போது போலிசார் சேகரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
Comments