கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க முடியாது என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், யுஜிசி சுற்றறிக்கையின்படி தேர்வுகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி கடந்த ஜூலை 6ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது.
இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தாமல், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க முடியாது என யுஜிசி திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தும், டெல்லி, ஒடிசா, பஞ்சாப், ஹரியானா, மத்தியப்பிரதேச மாநிலங்கள் தேர்வுகளை ரத்து செய்தன.
கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், யுஜிசி சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், யுஜிசி வாதங்களை ஏற்று நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தாமல் பட்டங்களை வழங்க முடியாது என கூறியுள்ள நீதிபதிகள், யுஜிசி சுற்றறிக்கை செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, தேர்வுகளை தள்ளிவைக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்துள்ள நீதிபதிகள், செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகும் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என மாநில அரசுகள் கருதினால், யுஜிசியுடன் கலந்தாலோசித்து புதிய தேர்வு தேதிகளை முடிவு செய்யலாம் என கூறியுள்ளனர்.
Comments