அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட லாரா புயல்...
அமெரிக்காவைத் தாக்கிய லாரா சூறாவளிப் புயல் காரணமாக, மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 6 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
லூசியானா மாகாணத்தில் கேம்ரான் மற்றும் போல்க் துறைமுகம் இடையே லாரா புயல் நேற்று கரை கடந்தது. அப்போது மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடலில் பல அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன.
மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் இயல்பு நிலை முடங்கியது. கடந்த 160 ஆண்டுகளில் இதுபோன்ற புயல் வீசியதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
புயல் காரணமாக பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் பல மரங்கள், தொலைத் தொடர்பு கம்பங்கள், மின்விளக்குகள் போன்றவை வேரோடு சாய்ந்தன. ஏராளமான கார்களும் வீடுகளும் புயலால் சேதம் அடைந்தன.
லாரா புயல் கடந்து செல்லும் பாதையில் சுமார் 40 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இதில் ஆபத்தான பகுதிகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர். லூசியானாவிலும் டெக்ஸாசிலும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர்.
புயல் பாதித்த லூசியானா, டெக்சாஸ், அர்க்கன்சாஸ் மாகாணங்களில் உள்ள லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.
புயலின் தாக்கம் காரணமாக கடலோரம் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள பலமணி நேரமாகலாம் என்று ஷெரீப்பும் காவல்துறையினரும் தெரிவித்தனர்.
Comments