ராணுவத்தில் சுயசார்பு - பிரதமர் மோடி அறிவிப்பு
உள்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவ தொழிற்துறையில் சுயசார்பை அதிகரிப்பது குறித்த காணொலி கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பல ஆண்டுகளாக மிகப்பெரிய ராணுவ தளவாட இறக்குமதியாளர்களில் ஒன்றாக இந்தியா இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரம் அடைந்த வேளையில், உள்நாட்டு ராணுவ உற்பத்திக்கான பெரிய திறனும், 100 ஆண்டுகளாக அதற்கான சூழலும் உருவாகி வந்ததாக கூறிய மோடி, ஆனால் அந்த துறையில் தேவையான கவனம் செலுத்தப்படவில்லை என கூறினார்.
தானியங்கி முறையில், உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியில் 74 சதவிகிதம் வரை நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார். ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கவும், தனியார் பங்களிப்பை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சில ராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு அரசு தடைவிதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சுயசார்பு பாரதம் திட்டம் உள்நாட்டை நோக்கிய திட்டமல்ல என்ற அவர், சர்வதேச பொருளாதாரத்தையும், அமைதியையும் மேம்படுத்த இந்தியாவை தயார் படுத்தும் திட்டம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார்.
Comments