தொழிலதிபரிடம் பணம் பறிப்பு பயங்கரவாதியைப் பிடிக்கத் தேடல்
சென்னையில் தொழிலதிபரைக் கடத்தி 2 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில் பயங்கரவாதி என கூறப்படும் தவ்பீக் உள்ளிட்ட 7 பேருக்கு தொடர்பு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை ஏழுகிணறைச் சேர்ந்த திவான் அக்பர் மண்ணடியில் அச்சகம் நடத்திக்கொண்டு, ஆடைகள், மின்னணுப் பொருட்கள் வணிகமும் செய்து வருகிறார்.
கடந்த 17ஆம் தேதி முத்தியால்பேட்டையில் உள்ள நண்பர் வீட்டில் இருந்து வெளியே வந்த இவரைக் காரில் கடத்திச் சென்ற கும்பல் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அக்பரின் தம்பியிடம் செல்பேசியில் தொடர்புகொண்டு மிரட்டியதை அடுத்து, அவர் 2 கோடி ரூபாய் கொடுத்துத் தனது அண்ணனை மீட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அக்பர் புகார் அளித்ததையடுத்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் உமா மகேஸ்வரன், ஆல்பர்ட் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
கடத்தலில் முக்கியப் புள்ளியான தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தவ்பீக் உட்பட 7 பேரைத் தேடி வருகின்றனர்.
இஸ்லாமிய தற்காப்பு படை மற்றும் இறைவன் ஒருவனே எனும் அமைப்புகள் மூலம் இளைஞர்களை அடிப்படைவாதச் செயல்களில் ஈடுபடுத்தியதாகத் தவ்பீக் மீது தேசியப் புலனாய்வு முகமையில் வழக்கு உள்ளது.
தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டும் வேலையில் தவ்பீக் ஈடுபட்டதாகவும், ஹவாலா பணப் பரிமாற்றத்தில் கிடைக்கும் பணத்தைத் தீவிரவாத அமைப்புகளுக்குப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட தொழிலதிபர் திவான் அக்பர், கடத்திய தவ்பீக் ஆகிய இருவரும் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதும், இதில் ஏற்பட்ட தகராறால் தவ்பீக் தனது கூட்டாளிகள் மூலம் அக்பரைக் கடத்தியதும் தெரியவந்துள்ளது.
அக்பரை மீட்கக் கொடுக்கப்பட்ட பணம் ஹவாலா பணம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரித்து வரும் கியூ பிரிவு போலீசார் திருச்சி மணிகண்டத்தில் தவ்பீக்கின் மனைவி 3 மாத கர்ப்பினியான சல்மாவைக் கைது செய்துள்ளனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த சல்மா போலி பாஸ்போர்ட் மூலம் வந்தது அம்பலமாகியுள்ளது.
கடத்தப்பட்ட தொழிலதிபர் அக்பரும் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதால், அது குறித்துச் சென்னை முத்தியால்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பயங்கரவாதத் தொடர்பும் உள்ளதால் தேசியப் புலனாய்வு முகமையும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
Comments