நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம்... அதிமுக எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் விசாரணை...
கடந்த 2017ஆம் ஆண்டு, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் 11 பேரிடம், காணொலி காட்சி மூலம் சபாநாயகர் தனபால் விசாரணையை தொடங்கியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி, பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
கொறடா உத்தரவை மீறிய அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது. 11 பேரையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக மீண்டும் முறையிட்டதை அடுத்து, இந்த விஷயத்தில் சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க கோரும் விவகாரத்தில், சபாநாயகர் தனபால் காணொலி மூலம் விசாரணையை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக எம்.எல்.ஏ.க்கள் பாண்டியராஜன், நட்ராஜ் ஆகியோரிடம் சபாநாயகர் விசாரணை நடத்தினார்.
அரசுக்கு ஆதரவாக வாக்களித்து பின்னர் தினகரனுக்கு ஆதரவகாக செயல்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட சோழிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ., பார்த்திபனிடம் அவர் அளித்த புகார் மனு குறித்தும் சபாநாயகர் தனபால் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., உள்ளிட்ட மற்ற எம்.எல்.ஏக்களுடனும் சபாநாயகர் காணொலிக் காட்சி மூலம் விரைவில் விசாரணை நடத்த உள்ளார்.
Comments