தாயும் உடன்பிறந்தவர்களும் பலி... உயிர் பிழைத்தாலும் தனிமரமான சிறுவன்!
மகாராஸ்டிர மாநிலம் ராய்காட்டில் நடந்த கட்டட விபத்தில் 19 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட சிறுவனின் தாயும், சகோதரியும் இறந்து போய்விட்டனர். இந்தத் தகவலை சிறுவனிடத்தில் சொல்ல முடியாமல் அவனின் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி ராய்காட் மாவட்டம் காஜல்புரா பகுதியில் ‘தாரிக் கார்டன்’ என்ற 5 மாடி குடியிருப்பு திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளிலிருந்து 19 மணி நேரம் கழித்து முகமது நதீம் பாங்கி என்ற சிறுவன் மீட்புப்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டான். முகத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சிறுவன் சிகிச்சைக்கு பிறகு ஆகஸ்ட் 26- ஆம் தே வீடு திரும்பினான்
தற்போது, சித்தியின் அரவணைப்பில் சிறுவன் இருக்கிறான். சிறுவன் உயிர் தப்பினாலும் அவனின் தாய் தாய் நவுசிக் நதீம் சகோதரிகள் ஆயிஷா , ருக்காயி ஆகியோர் இந்த விபத்தில் பலியானது உறவினர்கள் கடும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
சிறுவன் மருத்துவமனையில் இருக்கும் போதே, அவனின் தாயார், சகோதரிகளின் உடல்கள் அடக்கமும் செய்யப்பட்டு விட்டன. உயிர் பிழைத்தாலும் கடைசி ஒரு முறையாக தாயின் முகத்தையும் உடன் பிறந்தவர்களின் முகத்தையும் காண முடியாத பரிதாப நிலை சிறுவன் முகமது பாங்கிக்கு ஏற்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். சிறுவன் முகமது பாங்கியின் தந்தை துபாயில் பணி புரிந்தார். அவராலும் உடனடியாக தாயகம் திரும்பி, மனைவி மற்றும் மகள்களின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாத நிலை உருவானது.
சிறுவன் முகமது பாங்கி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதிலிருந்து அம்மாவை எங்கே அக்காவை எங்கே தங்கையை எங்கே என்று கேட்டவாரே இருக்கிறான். சிறுவனின் உறவினர்களோ அவனிடத்தில் கூற தயங்கிக் கொண்டும் தவித்து கொண்டும் இருக்கின்றனர்.
தாய், தந்தை, அக்காள், தங்கை என்று சகல உறவுடன் வாழ்ந்த சிறுவன் தற்போது தனிமரமாகி நிற்பதுதான் வேதனையிலும் வேதனை!
Comments