மிஸ்டர் ஒயிட் டவுசரை கழட்டும் ராஜஸ்தாணிஸ் வீடியோகால் வில்லங்கம்..! போலீசில் குவியும் புகார்கள்

0 5819

முகநூலில் பிரபலமாக இருக்கும் பிரமுகர்களை குறிவைக்கும் ராஜஸ்தானை சேர்ந்த பெண்கள் சிலர், வீடியோ சாட்டிங் செய்து, முகநூல் நண்பர்களை அரைகுறை ஆடையுடன் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு லட்சக்கணக்கில் பணம் பறித்து வருவதாக 50க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதால், முகநூல் பயன்படுத்துவோர் எச்சரிக்கையாக இருக்க சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனாவால் ஊரடங்கு வந்தாலும் வந்தது பெரும்பாலான நபர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் மூழ்கி திளைத்து வருகின்றனர். இதில் முகநூலில் அதிகம் செல்வாக்கு பெற்ற, சமூகத்தில் நல்ல பெயர் உள்ள மிடில் ஏஜ் பிரபலங்களை குறிவைத்து நூதன பணப்பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதாக சென்னை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

பார்ப்பதற்கு பளிங்கு சிலைபோல இருக்கும் பெண்ணின் டிபியுடன் முகநூலில் நட்பு அழைப்பு விடுக்கப்படும். சம்பந்தப்பட்ட முகநூல் பிரபலங்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட பின்னர் அவர்களின் பதிவை புகழ்ந்து தனிப்பட்ட சாட்டிங்கில் வாழ்த்து மழை பொழிவார்கள்..!

ஒரு கட்டத்தில் அந்த புகழ்ச்சிக்கு மயங்கிய பிரபலத்தை எளிதாகத் தொடர்பு கொள்ளும் வகையில் செல்போன் நம்பரை பகிந்து கொள்வர். பின்னர் அந்த பிரபலத்துடன் வீடியோ சாட்டிங் செய்ய அழைப்பு விடுப்பர். அதுவும் அந்த பிரபலங்கள் தனிமையில் இருக்கும் நேரம் அறிந்து எதிர்முனையில் சாட்டிங் செய்யும் பெண்கள் அறைகுறை ஆடைகளுடன் வீடியோவில் தோன்றுவர்.

பின்னர் மெல்ல மெல்ல அந்த பிரபலத்தை தங்கள் காதல் வலையில் விழவைத்து, தங்களைப் போலவே அந்த பிரபலத்தையும் அரைகுறை ஆடையுடன் வீடியோகாலில் தங்களுடன் பேச தூண்டுவார்கள். அந்த முகநூல் பிரபலம், தனது ஆடைகளை களைந்தால் அத்தோடு முடிந்தது அவரது போராட்ட வரலாறு, அதன் பின்னர் வலையில் சிக்கிய எலிதான் என்று எச்சரிக்கின்றனர் போலீசார்.

அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் 3 முகநூல் கணக்குகளின் லிங்க்குகள் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கப்படும், வீடியோ சாட்டிங்கில் சட்டைகளை உரித்த சாரைப்பாம்பு போல காட்சியளித்த அந்த பிரபலத்துக்கு பிரச்சனை தொடங்கி விடும். அந்த சாட்டிங் வீடியோவை அவரது நட்பு வட்டத்தில் பரப்பாமல் இருக்க, முதலில் ஆயிரக்கணக்கில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல், சம்பந்தப்பட்ட நபர் வசதியானவர் எனத் தெரிந்தால் போதும் லட்சங்களைக் கறந்து விடும்.

இதுவரை 50க்கும் மேற்பட்ட புகார்கள் வாய்மொழியாக சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட விசாரணையில் ராஜஸ்தானில் உள்ள கிராமத்தில் இருந்து கொண்டு ஊரடங்கை பயன்படுத்தி, வீட்டில் இருந்தவாறே பிரபலங்களை ஆன்லைன் மூலம் அழகில் மயக்கி, அவர்களிடம் இருந்து பணத்தைப் பறித்து வருவது தெரியவந்துள்ளது.

பணத்தை பறிகொடுத்த ஜொள்ளர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க மறுத்து அடம்பிடிப்பதால், பிளாக் மெயில் செய்து பணம் பறிக்கும் இந்த கும்பலை கைது செய்ய இயலாத நிலை இருப்பதாகவும், பணத்தை பறிகொடுத்த பலர் அவமானத்திற்கு அஞ்சி புகாரே தெரிவிக்கவில்லை என்கின்றனர் காவல்துறையினர்.

இது போன்ற முகநூல் பிளாக் மெயில் கும்பலிடம் வீடியோ காலில் சிக்கி வில்லங்கம் ஆகாமல் இருக்க தேவையற்ற நட்பு அழைப்புகளை ஏற்று அவர்களுடன் விவகாரமான வகையில் வீடியோகாலில் உரையாடுவதை தவிர்த்து விடுங்கள் என்று எச்சரித்துள்ளனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments