உருவானது திருச்சியை மையமாகக் கொண்ட தொல்லியல் மண்டலம் - தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு!
பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஆறு புதிய தொல்லியல் மண்டலங்களை (ASI circle) உருவாக்கியுள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் புதிதாகத் திருச்சியை மையமாகக் கொண்ட தொல்லியல் மண்டலம் உருவாக்கப்பட்டிருப்பதால், தென் தமிழகத்தில் பராமரிக்காமல் விடப்பட்ட பழைமையான கோயில்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் பல பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் மத்தியப் பிரதேசத்தில் ஜபால்பூர், உத்திரப் பிரதேசத்தில் ஜான்சி மற்றும் மீரட், மேற்கு வங்கத்தில் ரைகாஞ்ச் மற்றும் தமிழகத்தில் திருச்சியை மையமாகக்கொண்ட புதிய ஆறு தொல்லியல் மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு தொல்லியல் மண்டலங்களால் நம் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களைச் சிறப்பான முறையில் பாதுகாக்க முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் பெங்களூர், தார்வார்ட், ஹம்பி என்று மூன்று தொல்லியல் மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெலங்கானாவில் ஹைதராபாத்திலும், ஆந்திராவில் அமராவதியிலும் தனித்தனி மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள 411 தொல்லியல் மற்றும் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்க சென்னையை மையமாகக் கொண்ட ஒரேயொரு தொல்லியல் மண்டலம் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. சென்னை தொல்லியல் மண்டலத்தைப் பிரித்து தென் தமிழகத்தில் வேறொரு தொல்லியல் மண்டலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்திலிருந்து நெடுநாட்களாகவே இருந்து வந்தது.
இந்தச் சூழலில், சென்னை தொல்லியல் மண்டலத்தை இரண்டாகப் பிரித்து திருச்சியை மையமாகக்கொண்ட மற்றொரு தொல்லியல் மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையால் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் தமிழகத்தில் பராமரிக்கப்படாத தொல்லியல் சின்னங்களும், பாரம்பரிய சின்னங்களும் பாதுகாக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
Comments