மீடியா கார் மீது தாக்குதல்.. கஞ்சா கும்பல் அட்டூழியம்..!
சென்னை ஐ.சி.எஃப். பகுதியில், கஞ்சா போதையில் வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளைக் கும்பல் ஒன்று தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் வாகனத்தை மறித்து பணம் கேட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
ஊரடங்கிற்கு பின்னர் சென்னையில் வழிப்பறி குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பெரம்பூர் அடுத்த ஐசிஎப் பகுதியில் கஞ்சா போதையில் கையில் கத்தியுடன் வலம் வந்த மர்ம கும்பல் ஒன்று அந்தவழியாக வந்த வாகன ஓட்டிகளை வழிமறித்துள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டிகள் அவர்களைக் கண்டு அஞ்சி திரும்பிச் சென்ற நிலையில், அவர்கள் மீது கத்தியை வீசி எறிந்துள்ளனர். அப்போது அந்த வழியாக தனியார் செய்தித் தொலைக்காட்சியின் வாகனம் ஒன்று வந்துள்ளது.
போதையில் இருந்த வழிப்பறிக் கும்பல் எதிரே வருவது மீடியா வாகனம் என்பது தெரியாமல், அந்த காரை மறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளது. அதில் இருந்த செய்தியாளர் மற்றும் ஓட்டுனரிடம் பணம் ஏதும் இல்லை என்பதை அறிந்ததும் கார் மீது ஏறி மிதித்ததில், முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இது குறித்து போலீசில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விரட்டியுள்ளனர். இதையடுத்து தனியார் செய்தி தொலைக்காட்சியோ, அந்நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஓட்டும் சேக் என்பவரோ வழிப்பறி சம்பவம் புகார் எதும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
அதே நேரத்தில், தகவல் அறிந்த காவல் உயரதிகாரிகள் வழிப்பறி போதைக் கும்பலை பிடிக்க உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியின் அருகேதான், அயனாவரம் கஞ்சா ரவுடி சங்கரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றது குறிப்பிடதக்கது.
கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்காத வரை இதுபோன்ற வழிப்பறி தாக்குதல் சம்பவத்தை இந்த பகுதியில் தடுப்பது சிரமமானது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
Comments