முககவசம் அணிய அறிவுரை.. மூடு அவுட்டான குடிமகன்ஸ்..! சுகாதார நிலையத்தில் அடிதடி

0 3249

திருவண்ணாமலை அருகே, முகக் கவசம் அணிந்து கொண்டு சிகிச்சைக்கு வரும்படி கூறிய செவிலியரைத் தாக்கி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 3 குடிமகன்கள் சூறையாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதை ஆசாமிகள் மூன்று பேர் வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததாக கூறி சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

அந்த மூன்று பேரும் முகக்கவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் வந்ததை பார்த்த செவிலியர் சகாயமேரி என்பவர், சிகிச்சைக்கு வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் செவிலியரை கன்னத்தில் சரமாரியாக தாக்கி ரகளையில் ஈடுபட்டனர்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த நாற்காலி, மேசை, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி, தூக்கி வீசி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை படம்பிடித்து காவல் நிலையத்திற்கு அனுப்பியதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உத்தரவின்பேரில், காவல்துறையினர் வீடியோவில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு, கொளத்தூர் விக்ரம், விமல்ராஜ், சுந்தரபிரகாசம் ஆகியோரைக் கைது செய்தனர்

3 ரூபாய் முகக் கவசம் அணிந்து வராமல் அடம் பிடித்து ரகளை செய்ததால் ஜெயில்... பெயில்... என்று ஆளுக்கு 10 ஆயிரம் வீதம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இந்த குடிமகன்கள். அதே நேரத்தில் கொரோனா சூழ்நிலையிலும் இடைவிடாத மருத்துவ பணியில் இருக்கும் செவிலியர் மற்றும் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது சிகிச்சைக்கு செல்வோரின் கடமை.

அதை விடுத்து, குடி போதையில் அரசு மருத்துவமனையிலோ அல்லது சுகாதார மையத்திலோ ரகளை செய்தால் தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments