கை கொடுத்த சோனு சூட் உதவிக்கு வந்த சச்சின்.... மகிழ்ச்சியில் அஷரப் சாச்சா!
கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் கொரோனா லாக்டௌன் காரணமாக, கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக, கிரிகெட் விளையாட்டை நம்பியிருக்கும் தொழிலாள்ர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சச்சின், விராட் கோலி, ஸ்டீவன் ஸ்மித், கிறிஸ் கெயில் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் பேட்டை ரிப்பேர் செய்து கொடுக்கும் தொழிலாளி அஷரப் சௌத்திரியும் கடந்த சில மாதங்களான தொழில் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார் .
மும்பையை சேர்ந்த இவர் உள்ளுர் கிரிக்கெட் வீரர்களிடத்தில் வெகு பிரபலம். அஷரப் சாச்சா என்று கிரிக்கெட் வீரர்கள் இவரை செல்லமாக அழைப்பார்கள். மும்பையில் சர்வதேச போட்டிகள், ஐ.பி.எல் போட்டிகள் நடந்தால் மைதானத்துக்குள்ளேயே அஷரப் சாச்சாவுக்கு தனி இடம் ஒதுக்கப்படும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத நிலையிர், அஷரப் சௌத்திரிக்கு கிட்னியில் கல் அடைப்பும் ஏற்பட்டது.
மும்பை சவாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்தார். அஷரப் சௌத்திரியின் நிலை குறித்து , சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியதையடுத்து, நடிகர் சோனு சூட் உடனடியாக உதவிக்கு வந்தார். ட்விட்டர் தளத்தில், ' அந்த நண்பரின் விலாசத்தை கண்டுபிடியுங்கள்' என்றுதான் சோனு சூட் பதிவிட்டிருந்தார்.
உடனடியாக அஷரப் சௌத்திரிக்கு பல முனைகளிலிருந்து உதவி கிடைக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து , சச்சின் தெண்டுல்கரும் அஷரப் சௌத்திரியிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார்.
மேலும், சச்சின் தரப்பிலும் அஷரப் சௌத்திரிக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. உதவிகள் கிடைத்ததால், கடந்த 12 நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஷரப் சௌத்திரி மகிழ்ச்சியடைந்துள்ளார்.
Comments