நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மன்னிப்புக் கேட்க மறுப்பு தண்டனை விவரங்கள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மன்னிப்புக் கேட்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தண்டனை விவரங்கள் அறிவிப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் உச்சநீதிமன்றம், நீதிபதிகளை விமர்சித்த வழக்கில் பிரசாந்த் பூசன் குற்றவாளி எனக் கூறிய நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷனுக்கு நேற்றுவரை அவகாசம் வழங்கியிருந்தது.
மன்னிப்பு கேட்க முடியாது என முதலிலேயே தெரிவித்து விட்ட அவர், தம்முடைய மனசாட்சிக்கு விரோதமாக மன்னிப்பு கேட்க முடியாது என நேற்று மீண்டும் பதில் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவர் மன்னிப்பு கேட்பதற்காக அரை மணி நேரம் அவகாசம் வழங்கினர்.
ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டில் பூஷன் உறுதியாக இருந்ததால், தண்டனை விவரங்கள் அறிவிப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
முன்னதாக, பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை வழங்கக் கூடாது, தேவைப்பட்டால் அவரை எச்சரித்து விடுவித்துவிடலாம் என அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வலியுறுத்தினார்.
இதேபோல, மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானிடம் நீதிபதிகள் கருத்து கேட்டபோது, பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை கொடுத்து அவரை தியாகியாக்கிவிட வேண்டாம் என்றும், இது சர்ச்சைகள் தொடர்வதற்கே வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
Comments