மகாராஷ்டிரத்தில் கட்டிடம் இடிந்து விபத்து.. 20 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 வயது சிறுவன் உயிரோடு மீட்பு..!
மகாராஷ்டிரத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 20 மணி நேரமாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 4 வயது சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டான். மேலும் 11 பேர் சிக்கியுள்ள நிலையில், 2ஆவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராய்கட் மாவட்டத்தில் மஹத் நகரின் கஜல்புரா பகுதியில், தி தாரிக் கார்டன் என்ற 5 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்திருந்தது. இதில் 40 குடும்பங்களை சேர்ந்த 97 பேர் வசித்து வந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில், மேலிருந்து 3 தளங்கள் நொறுங்கி விழுந்துள்ளன. ஆனால் அதற்கு முன்பாகவே ஆபத்தை உணர்ந்து அங்கு குடியிருந்த சிலர் தப்பி வெளியேறிவிட்டனர். ஆனால் கட்டிடம் இடிந்து விழுந்த பிறகு இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.
மீட்புப் பணி 2ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 3 குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 78 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் கட்டிடம் இடிந்துவிழுந்தபோது அவ்வழியே சென்றவர். காயத்திற்கு சிகிச்சை பெறும்போது இதய செயலிழப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். மற்ற 7 பேரின் சடலங்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. இதேபோல, சுமார் 20 மணி நேரம் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 வயது சிறுவன் மீட்கப்பட்டான்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், கட்டிடத்தை வடிவமைத்தவர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 5 பேர் மீது, 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டிட விபத்து குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் வேதனை தெரிவித்துள்ளனர்.
Comments