9.3 பில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் உமிழப்படும் புறஊதாக் கதிர்... இந்திய செயற்கைக்கோள் கண்டுபிடித்து சாதனை!

0 17809

பூமியிலிருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் மண்டலத்திலிருந்து புற ஊதாக் கதிர்கள் அதிகளவில் உமிழப்படுவதை இந்தியாவின் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான ‘அஸ்ட்ரோசாட்’ கண்டுபிடித்துள்ளது. 

2015- ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் எக்ஸ் - ரே, அகச்சிவப்புக் கதிர், புற ஊதாக் கதிர் உள்ளிட்ட பல அலைநீளங்களுடன் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது.

image
அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் செயல்பாடுகளைக் கண்காணித்து வந்த, புனேவிலுள்ள வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழகம் கூறுகையில், “இந்தியாவின் முதல் பல அலைநீள செயற்கைக்கோளான ஆஸ்ட்ரோசாட் 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள AUDFs01 என்று அழைக்கப்படும் விண்மீன் மண்டலத்திலிருந்து தீவிர புற ஊதாக் கதிர் உமிழ்வைக் கண்டறிந்துள்ளது. நாசாவின் ஹப்பிள் புறஊதா விண்வெளி தொலைநோக்கி, 13.6 eV க்கு அதிகமான புறஊதாக் கதிர் உமிழ்வை விண்மீன் மண்டலத்திலிருந்து இதுவரை  கண்டறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் புற ஊதாக் கதிர் உமிழ்வைக் கண்டறிந்து தனித்துவமான சாதனையைச் செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

புனே, வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக இயக்குநர், “பிரபஞ்சத்தின் இருண்ட யுகங்கள் எவ்வாறு முடிவடைகின்றன என்பதைக் கண்டறிவதற்கு இது முக்கியமான கண்டுபிடிப்பாகும். இது போன்ற முக்கியமான கண்டுபிடிப்பை நம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததில் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments