கிம் ஜாங் உன்னுக்கு என்னவாச்சு.... வட கொரியாவின் முதல் பெண் அதிபராகிறாரா கிம் யோ ஜாங்?
வடகொரியாவின் அதிபரும் சர்வாதிகாரியுமான கிம் ஜாங் உன்னின் உடல் நிலை குறித்த மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அளவுக்கு அதிகமாக மாமிசம் மற்றும் மது சாப்பிட்டதால் அவரது உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது, கிம் ஜாங் உன் கோமாவுக்குச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சமீப காலமாக, வடகொரிய அதிபர் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை என்று தென்கொரியாவைச் சேர்ந்த புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தென்கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின், “வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார். அதனால், வட கொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று கூறியது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வடகொரிய விவகாரங்களைக் கவனித்துவரும் சர்வதேச நிபுணர்களும் கிம் இறந்திருக்கலாம் என்றே கருதுகிறார்கள். கிம் ஜான் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் இறந்து சில மாதங்களுக்குப் பின்னர் தான் அவரின் இறப்பு குறித்து முறையாக அறிவிக்கப்பட்டது. அதைப் போலவே அடுத்த வடகொரிய அதிபராக கிம் யோ ஜாங் பதவியேற்கும் போது கிம் ஜான் உன்னின் உடல் நிலை குறித்த செய்தி முறையாக அறிவிக்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள். தனது இரண்டு சகோதரர்களை ஓரம்கட்டிவிட்டு இளையவரான கிம் ஜான் உன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் ஒரு தங்கையும் உண்டு. அவர்களின் பெயர் கிம் ஜாங் நம் மற்றும் கிம் ஜாங் சோல். இதில், 2017-ம் ஆண்டு கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிம் ஜாங் நம் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவரான கிம் ஜாங் சோல் அரசியலில் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. கிட்டார் கலைஞரான இவர், எரிக் கிளாப்டன் இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு இவர் வடகொரியாவுக்குத் திரும்பினார். ஆனால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இவருக்கு வடகொரியாவில் செல்வாக்கு இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கிம் ஜாங்குக்கு குழந்தைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் புகைப்படங்கள் இதுவரை பொது வெளியில் வந்தது இல்லை. குழந்தைகள் சிறு வயது கொண்டவர்களாக இருப்பதால், ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் ஏற்கெனவே வடகொரியாவில் அதிகாரம் செலுத்திவரும் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் வடகொரியாவின் அதிகாரத்தைக் கைப்பற்றுவார் என்று கணிக்கப்படுகிறது. வடகொரிய மக்கள் இதுவரை பெண் ஆட்சியாளரைக் கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் இவருக்குத் தொடர்புகள் அதிகம் இருப்பதால், அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார் கிம் யோ ஜாங்.
தற்போதைய சூழலில், வட கொரியாவைப் பொருத்தவரை கிம்முக்கு அடுத்து சக்திமிக்க தலைவராகக் கருதப்படுபவர் கிம் யோ ஜாங். வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜொங் இல்லின் இளைய மகள் ஆவார். 1996 - ம் ஆண்டு முதல் 2000 - ம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்தில் படித்தார். வடகொரியாவின் அதிகாரமிக்கத் தலைவர்களுள் ஒருவரான, ராணுவத் தலைமைத் தலைவர் சூ ரியாங் - ஹோவின் இரண்டாம் மகன் சூ சாங் என்பவரை 2015 - ம் ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்துகொண்டார்.
2004 - ம் ஆண்டு முதல் வட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுவின் உறுப்பினராகவும் 2014 - ம் ஆண்டு முதல் வட கொரியாவின் கொள்கை பரப்பு மற்றும் கிளர்ச்சித் துறையின் துணை இயக்குநராகவும் செயல்படுகிறார். வட கொரியாவின் அதிகாரம் மிக்க அமைப்பான வடகொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், முக்கிய அரசியல் தலைவராகவும் உள்ளார்.
தற்போது வட கொரியாவின் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால் கிம் யோ ஜாங்கிடம் தான் அதிகாரங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஒருவேளை, கிம் யோ ஜாங் மட்டும் வடகொரியாவின் அதிபரானால், அண்ணன், தந்தை மற்றும் தாத்தாவை விடவும் அதிக சர்வாதிகாரமிக்கவராக காட்டிக் கொள்வார் என்றும் சொல்கிறார்கள்.
கடந்த 1999 ம் ஆண்டுவாக்கில் தென்கொரிய விவகாரத்தைக் கவனித்துக் கொண்ட அமெரிக்க ராணுவ அதிகாரி டேவி மாக்வெல் கூறுகையில், “கிம் யோ ஜாங் எப்படி ஆட்சி செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. இளம் வயதுடைய கிம் ஜாங் உன் பொறுப்பேற்ற போது அவரது தந்தையை விடவும் வடகொரியாவை வெளி உலகத்துக்குக் கொண்டுவருவார் என்று உலக நாடுகள் நம்பின. ஆனால், நடந்ததோ வேறு. தன் அண்ணனை போலவே கிம் யோ ஜாங்கும் சர்வாதிகாரியாகவே நடப்பார்'' என்று தெரிவித்துள்ளார்.
Comments