மாவட்ட ஆட்சியர்களுடன் 29-ந் தேதி முதலமைச்சர் ஆலோசனை..! இபாஸ் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தகவல்...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு தளர்வு ஆகியவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ந் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவல் காரணமாக 6 வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் மாவட்டங்களில் நிலவும் கொரோனா நிலவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் வரும் 29 ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் நேற்று நடத்திய ஆலோசனையில் தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை எளிதாக்கியதால் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் சதவீதம் உயர்ந்துள்ளதாக சில மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவும், பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கிடையேயும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகவும், மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் நிலவரங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, வரும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், பொது போக்குவரத்தை அனுமதிப்பது குறித்தும், இ பாஸ் நடைமுறையை ரத்து செய்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன, அதனை எவ்வாறு எதிர்கொள்வது, இ பாஸை ரத்து செய்வதா அல்லது தொடர்வதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments