சாதியை வைத்து மிரட்டும் ஊராட்சி மன்ற தலைவர்..! புகார் தெரிவித்தால் பி.சி.ஆர்..!
கோவை அருகே, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியவரின் வீட்டிற்கு ஊராட்சித் தலைவியுடன் சென்ற அவரது கணவர், சாதிப்பெயரைச் சொல்லி திட்டியதாக புகார் அளிப்பேன் என்று மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை, தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதால் உருவான சர்ச்சைக்கு காரணமானவர்கள் மீது அரசு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அடுத்த ஜெய்கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவி சரிதாவும் அவரது கணவர் வீரமுத்துவும் அத்துமீறலில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
சம்பவத்தன்று ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த பாலசுப்பிரமணியம், தன்னை சாதிப் பெயரை சொல்லி திட்டியதாக ஊராட்சித் தலைவி சரிதாவும் அவருக்கு ஆதரவாக திமுகவினர் சிலரும் புகார் தெரிவித்தனர்.
இவர்களது புகாரின் பேரில் சாதிய தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பாலசுப்பிரமணியம் மீது நெகமம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இந்த நிலையில், தனது தந்தை மீது பொய்யான புகாரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பாலசுப்பிரமணியத்தின் மகன் அதற்கான ஆதாரமாக குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெய்கிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் பொறுப்புக்கு புதிதாக வந்த சரிதா, அங்கு நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த தூய்மைப் பணியாளர்களை, பணி நீக்கம் செய்ததோடு, சிலமாதங்களுக்கான சம்பளத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சம்பள பாக்கி தரமுடியாது என்று தூய்மைப் பணியாளர்களிடம் ஊராட்சித் தலைவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்கள், சமூக ஆர்வலரான பாலசுப்பிரமணியத்திடம் முறையிட்டுள்ளனர்.
இதையடுத்து, ஜெய்கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பழைய பணியாளர்களை பணி நீக்கம் செய்தது ஏன் ? தூய்மைப் பணியாளர் சம்பளம் எவ்வளவு நிலுவையில் உள்ளது? ஏன் வழங்கப்படவில்லை ? என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பி பாலசுப்பிரமணியம் தபால் அனுப்பி உள்ளார்.
அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு மாவட்ட நிர்வாகத்தால் ஊராட்சி செயலருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி தலைவர் சரிதாவும் அவரது கணவர் வீரமுத்துவும் தங்கள் வீட்டிற்கு வந்து, தந்தை எங்கே என்று கேட்டு பகிரங்கமாக மிரட்டிச்சென்றதாக கூறியுள்ள பாலசுப்பிரமணியத்தின் மகன், அப்போது பதிவுசெய்யப்பட்ட உரையாடல் பதிவையும் வெளியிட்டார்.
அதில் சரிதாவின் கணவர் வீரமுத்துவே தனது சாதிபெயரை பலமுறை குறிப்பிட்டு சொன்னதோடு, திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த மாதிரியே இங்கும் நடக்கிறதுன்னு புகார் கொடுக்கவா ? என்றும் தன்னை சாதி பெயர் சொல்லி திட்டியதாக புகார் அளித்தால் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும் பரவாயில்லையா ? என்றும் சொல்வதோடு விடியுறதுக்குள்ள என்ன நடக்குமென்று பார் ? என்றும் பகிரங்கமாக மிரட்டிச்சென்றது பதிவாகி உள்ளது.
தங்களுக்காக கேள்வி கேட்ட பாலசுப்பிரமணியம் மீது பொய்யான புகாரின் பேரில் தீண்டாமை வன்கொடுமை வழக்கு போடப்பட்டதற்கு தூய்மைப் பணியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சாதிய இழிநிலையை சமூகத்தில் இருந்து போக்குவதற்காகவே வன்கொடுமை தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதையே ஆயுதமாக பயன்படுத்தி மற்றவர்களை மிரட்டுவது எந்த வகையிலும் நன்மை பயக்காது என்பதே கசப்பான உண்மை..!
Comments