காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி நீடிப்பார்...காரிய கமிட்டி தீர்மானம்..!
காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியாகாந்தியே நீடிப்பார் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 7 மணி நேரம் நீடித்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, அக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணு கோபால், செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியிட்டனர்.
காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியாகாந்தியே நீடிக்க வேண்டுமென கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். கட்சி வளர்ச்சியில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான அதிகாரம் சோனியா காந்திக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினர்.
4 மாநில முதலமைச்சர்கள் உள்பட மொத்தம் 52 தலைவர்கள் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர், 6 மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments