சீனா உடனான எல்லைப் பிரச்னை.. ராணுவ நடவடிக்கைக்கு தயார்..!
இந்திய - சீன எல்லைப் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக முப்படை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சுமுக நிலையை எட்ட இருதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், எல்லையில் படைகளை பின்வாங்குவதாக கூறும் சீனா, தொடர்ந்து மறைமுகமாக துருப்புகளை குவித்து வருகிறது.
இதுதொடர்பாக ஏஎன்ஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்த முப்படைத் தளபதி பிபின் ராவத், ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கொங்ரங் நாலா உள்ளிட்ட பல பகுதிகளில் சீன ராணுவத்தினர் அத்துமீறி உள்ளதாகவும், இதுதொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக தொடரும் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், இந்தியா தரப்பில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். சீனா உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் வேறு வழியில்லை என பிபின் ராவத் விளக்கமளித்துள்ளார்.
அதேசமயம், லடாக் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல்களை முறியடிக்க, இந்தியா தரப்பில் எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, விரிவான தகவல்களை வழங்க பிபின் ராவத் மறுத்துவிட்டார்.
Comments