காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்..? தேர்வுசெய்ய இன்று கூடுகிறது காரியக் கமிட்டி...

0 3455

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இன்று நடைபெற உள்ள காரிய கமிட்டிக் குழுவில் புதிய தலைவர் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத்தொடர்ந்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஓராண்டாக அப்பதவியில் சோனியா நீடித்து வரும் நிலையில், கட்சிக்காக களத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு வரக்கூடிய, முழுநேர தலைமை தேவை என காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் அவருக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. குறிப்பாக குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் போன்ற மூத்த தலைவர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதைதொடர்ந்து, கட்சித் தலைமை பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என சோனியா காந்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்து எடுப்பது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க, அக்கட்சியின் காரிய கமிட்டி இன்று கூடுகிறது.

கூட்டத்தில், கட்சிக்காக சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய, காங்கிரசை விட்டு விலகியுள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கக் கூடிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், கட்சியின் அனைத்து மட்ட தேர்தல்களும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்,கட்சிக்கு கூடுதல் துணை தலைவர்களை நியமிக்கப்பட வேண்டும், போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சோனியாவே பதவியில் நீடிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் சிலரும், மாநில காங்கிரஸ் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பதவியேற்க வேண்டுமென, கட்சியின் இளம் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சோனியா காந்தியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு, அதற்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நிறைவேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.`

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments