சுஷாந்த் சிங் வழக்கில் விசாரணையைத் தீவிரப்படுத்தியது சிபிஐ
நடிகர் சுஷாந்த்சிங் மர்மமான முறையில் இறந்த ஜூன் 14ம் தேதிக்கு முந்தைய நாள் அவரை சந்தித்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சுஷாந்த் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதையடுத்து 15 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு மும்பைக்கு வந்துள்ளது.
உடனடியாக தீவிர விசாரணையை மேற்கொண்ட இக்குழுவினர், பாந்த்ரா காவல்நிலையத்தில் சுஷாந்த் சிங் வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்டனர்.
சுஷாந்தின் சகோதரி உள்ளிட்ட உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சுஷாந்தின் பணியாட்கள், சமையல்காரர், உதவியாளர் உள்பட அனைவரும் விசாரிக்கப்பட்டனர்.
கடைசி நாளில் அவருடன் இருந்தவர்கள் , இறுதிக்கட்டத்தில் அவரை சந்தித்தவர்கள், சுஷாந்தின் தொலைபேசி அழைப்புகள், லேப் டாப் கணினி ஆவணங்கள், வரவு செலவு வங்கிக் கணக்குகள் என அனைத்துக் கோணங்களிலும் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
இதனிடையே சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த சி.பி.ஐ.யின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையின் 4 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments