வெளிமாநில பூக்கள் வேண்டாம் என்ற கேரள அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய தமிழக விவசாயிகள் கோரிக்கை
ஓணம் பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து பூக்களை கொள்முதல் செய்ய வேண்டாம் என்ற கேரள அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஈரோடு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப் பூ சாகுபடி செய்யப்படுகிறது. ஓணம் பண்டிகை நாட்களில் கேரளாவுக்கு அதிகளவில் இங்கிருந்து பூக்கள் கொண்டு செல்லப்படும். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க, ஓணம் பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து பூக்களை கொள்முதல் செய்ய வேண்டாம் என்றும் உள்ளூரிலேயே கிடைக்கும் பூக்களை பயன்படுத்துமாறும் கேரள முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள தமிழக விவசாயிகள், இங்கிருந்து காய்கறிகள், பால் உள்ளிட்டவை கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் நிலையில், பூக்களால் மட்டும் கொரோனா பரவும் என்பது ஏற்கத் தக்கதல்ல என்றும் எனவே கேரள அரசின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Comments