நிலவை 4400 முறை சுற்றிய ஆர்பிட்டர், மேலும் 7 ஆண்டுகள் செயல்படும் என இஸ்ரோ அறிவிப்பு
சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவை நாலாயிரத்து நானூறு முறை சுற்றியுள்ளதாகவும், அது மேலும் 7 ஆண்டுகளுக்குச் செயல்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
நிலவில் இறங்கும் முயற்சியின்போது அதன் விக்ரம் லேண்டர் தரையில் மோதிச் சேதமடைந்தது. விண்கலத்தின் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இந்த ஆர்பிட்டர் இதுவரை நாலாயிரத்து நானூறு முறை நிலவைச் சுற்றிவந்துள்ளதாகவும், இவ்வாறு ஏழாண்டுகள் சுற்றுவதற்கான எரிபொருள் அதில் உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆர்பிட்டரில் உள்ள கேமராக்கள் மூலம் நிலவின் ஆயிரத்து 56 சதுரக் கிலோமீட்டர் நிலப் பரப்பு படம்பிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை விண்கலம் அனுப்பினால் தரையிறங்கப் பாதுகாப்பான பகுதி எது என அடையாளம் காண இந்தப் படங்கள் உதவும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments