மேல்நிலை வகுப்புகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கும்..? தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு
மேல்நிலை பள்ளி வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கப்பட உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்புக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்த தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி, மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
11ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனி தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்காமல் பாரபட்சம் காட்டுவதால், அவர்கள் ஓராண்டை இழக்க நேரிடும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் 26ஆம் தேதி வரை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், முடிவுகள் வெளியாக ஒரு மாதமாகும் என்பதை சுட்டிக்காட்டி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேல்நிலை வகுப்புகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கப்பட உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments