சென்னையில் போலீசார் மீது தாக்குதல்... என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொலை

0 9216
சென்னையில் போலீசார் மீது தாக்குதல்... என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொலை

சென்னை அயனாவரத்தில், கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான சங்கர் போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கஞ்சா வழக்கில் கைது செய்து, கஞ்சா பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு பறிமுதல் நடவடிக்கைகாக அழைத்து செல்லும்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக 3 முறை சுட்டதில் சங்கர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாமூல் தர மறுத்ததாக அண்மையில் அயனாவரம் ஆதவன் சூப்பர்மார்க்கெட் உரிமையாளர் மீது ரவுடி சங்கர் கும்பல் தாக்குதல் நடத்தியது. நேற்றிரவு அவன் கைது செய்யப்பட்ட நிலையில், அயனாவரம் நியூஆவடி சாலையில் ஆர்டிஓ அலுவலகம் எதிரே உள்ள புதர்பகுதியில் கஞ்சா மூட்டைகளை பதுக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளான்.

அதை காட்டுமாறு ரவுடி சங்கரை சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த அரிவாளை எடுத்து, பாதுகாப்புக்காக சென்ற காவலர் முபாரக்கை இரு தோள்பட்டைகளிலும் வெட்டிய ரவுடி சங்கர், தப்பி ஓட முயன்றுள்ளான். சுதாரித்துக் கொண்ட ஆய்வாளர் நடராஜ் ரவுடி சங்கரை 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரவுடி சங்கர் உயிரிழந்தான். காலை 6.30 மணியளவில் சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்கவுன்டர் நடந்த இடத்தில் மூட்டை நிறைய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த ரவுடி சங்கருக்கு, இளநீர் சங்கர் என பெயர் உண்டு. தனது தம்பி கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் கஞ்சா விஜியை 2010-ஆம் ஆண்டு சங்கர் வெட்டி கொலை செய்துள்ளான்.

பின்னர் 2012-ல் மதுரவாயலில் மாமூல் தராத பில்டிங் காண்டிராக்டர் கொலை, பின்னர் 2013 ல் ஒரு கொலை என குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சங்கர், தனது தம்பி கதிர்வேல் கொலையில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி யமாஹா பாலாஜியை 2017-ஆம் ஆண்டில் திருமுல்லைவாயல் பகுதியில் கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்து அதிர வைத்தவன்.

இதுவரை சங்கர் மீது நான்கு கொலை, நான்கு கொலை முயற்சி உட்பட 51 வழக்குகள் உள்ளன. 9 முறை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டவன். 5 வழக்குகளில், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்து வந்த நிலையில் என்கவுண்டருக்கு பலியாகியுள்ளான். 

இதனிடையே, ரவுடி சங்கரால் தாக்கப்பட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலரை சந்தித்து, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகேஷ்குமார் அகர்வால், என்கவுன்ட்டர் சம்பவம் ஏன் நடந்தது என விளக்கினார். தலைமறைவாக உள்ள ரவுடிகள் பட்டியலிடப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என காவல் ஆணையர் கூறினார்.

சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக  எழும்பூர் நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments