ஆக்ஸ்போர்ட் பல்கலையின் ’கோவிஷீல்ட்’.. இந்தியாவிற்கான முதல் கொரோனா தடுப்பூசி..?

0 7431

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட்டின் 3ம் கட்ட பரிசோதனை சென்னை உள்ளிட்ட 17 இடங்களில் தொடங்கியுள்ளது. இந்தியர்களுக்கு கிடைக்கக் கூடிய முதல் தடுப்பூசியாக கோவிஷீல்ட் இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவை பொருத்தவரை, 3 தடுப்பூசிகள் மனிதர்கள் மீதான பரிசோதனையில் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மற்ற 2 தடுப்பூசிகளை விட முன்னணியில் உள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து கோவிஷீல்ட் மருந்தை தயாரித்துள்ள அஸ்ட்ரா ஜெனெகாவுடன், புனேவை தலைமையிடமாக கொண்ட சீரம் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட நாட்டின் 17 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 பேர் பங்குபெறும்,3ம் கட்ட பரிசோதனைகளை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. முதல் இரண்டு கட்ட சோதனைகளில் இந்த தடுப்பூசி, முதல் 14 நாட்களில் டி-செல்லை தூண்டியதாகவும், 28 நாட்களுக்குள் ஆன்டிபாடிகளை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு வெளியே உருவாக்கப்பட்டதில் மற்ற தடுப்புசிகளை காட்டிலும், கோவிஷீல்ட் அதிக அளவில் பரிசோதிக்கப்படுவதுடன் சாதகமான முடிவுகளையும் வழங்கி வருகிறது. மேலும், அதன் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான உரிமையை இந்திய நிறுவனம் பெற்று இருப்பதால், நடப்பாண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கு கிடைக்கக் கூடிய முதல் தடுப்பூசியாக கோவிஷீல்ட் இருக்கலாம் என கூறப்படுகிறது.

பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் இணைந்து உருவாக்கிய உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் ஜைடஸ் காடிலாவின் ஜிகோவ் டி ஆகியவை மருத்துவ பரிசோதனைகளின் ஆரம்ப கட்டங்களில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments