வாகன சோதனையில் சிக்கிய 2k கிட்ஸால் தமிழுக்கு சோதனை..! நாவில் தள்ளாடும் தாய் மொழி

0 157055

காவல்துறையினரின் வாகன சோதனையில் சிக்கிய  12 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் தமிழில், ஆயுத எழுத்து எத்தனை என்பது தெரியாமல் குழம்பி தவித்த சம்பவம் தேர்வில்லாமல் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வித்தரத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது. சாம்பவிகா என்ற தனியார் பள்ளி மாணவர்களின் தரமான சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையின் போது விதியைமீறி இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த ராகிணிபட்டி சாம்பவிகா தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் சிக்கினர். 

அந்த மாணவர்களுக்கு அபராதம் விதிக்காமல் அறிவுப்பூர்வமாக அவர்களிடம் சில கேள்விகளை போலீசார் எழுப்பினர். உயிரெழுத்துக்கள் எத்தனை என்று கேட்டதற்கு விழித்ததால், ஆயுத எழுத்து எத்தனை என போலீசார் முதல் கேள்வியில் சாய்ஸ் வழங்கினர்.

ஆனால் மாணவர்களில் ஒருவன் குயிஸ் நிகழ்ச்சி போல அடுத்தவனிடம் கேட்குமாறு பாஸ் சொல்லி பதற வைக்க, மற்றொரு மாணவனோ தனது சிற்றறிவுக்கு எட்டியது வரை , ஆயுத எழுத்துக்கள் 268 என்று கூறி காவலர்களை திகைக்கவைத்ததோடு சிரிக்கவும் வைத்தார்.

ஆயுத எழுத்து எத்தனை என்பது கூட தெரியாமல் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்ற அந்த டூ கே கிட்ஸ் இருவரும் விழித்ததால், உயிரெழுத்துக்கள் என்ன என்று அடையாளம் தெரியாத அந்த 12 ஆம் வகுப்பு பாலகர்களிடம், ஆனா, ஆவன்னா சொன்னால் விட்டு விடுவதாக போலீசார் வழங்கிய ஆஃபரை ஏற்று ஒருவர் சரியாக கூற....

கடைசியாக உச்சரித்த அக்கன்னா தான் ஆயுத எழுத்து என்று அந்த மக்கு பாஸ்ய்சுக்கு புரிய வைத்து, சிறுவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்று எச்சரித்து வண்டியை கையில் கொடுத்து அனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.

தனியார் பள்ளிகள் தங்களிடம் லட்சங்களை கட்டணமாக கொட்டிக் கொடுத்து படிக்கும் மாணவர்களின் அடிப்படை மொழித்திறமைகளை வளர்க்க தவறினால் இப்படித்தான் பொது வெளியில் யாரிடமாவது சிக்கி நகைப்புக்குள்ளாக நேரிடும் என்று சுட்டிக்காட்டும் கல்வியாளர்கள், மும்மொழிக்கொள்கை குறித்து தற்போது விவாதம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், தாய்மொழியே நம் மாணவர்கள் நாவில் தள்ளாட்டம் போடுவதை பார்க்கும் போது ஆங்கில வழிக்கல்வியை ஊக்கப்படுத்தும் தனியார் பள்ளிகள் தாய்மொழியான தமிழை பயிற்றுவிப்பதில் பின்தங்கி இருப்பதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதே நேரத்தில் இந்த இரு மாணவர்கள் பயிலும் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி செயலாளர் சேகர் என்பவருக்கு சுதந்திரதின விழாவில் சிறப்பான சேவைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ் வழங்கியது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments