ஜம்மு-காஷ்மீரில் 10,000 துணை ராணுவப்படையினரை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து 10 ஆயிரம் துணை ராணுவப் படையினரை உடனடியாக திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த தளங்களில் இருந்து கூடுதல் பாதுகாப்புப் படையினர் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், காஷ்மீரில் தற்போதைய கள நிலவரத்தை ஆய்வு செய்யும் வகையில், உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஒரே நேரத்தில் அதிகப்படியாக 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை திரும்பப் பெற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களை வாபஸ் பெறும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மே மாதத்தில் அங்கிருந்து ஆயிரம் துணை ராணுவப்படையினர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments