சென்னை சாலைகளில் மாட்டான்ஸ் தொல்லை..! அபராதம் விதிக்க ஆளில்லை

0 7097

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், இரவு நேரத்தில் மாடுகள் அவிழ்த்து விடப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையில் வாகன ஓட்டிகளுக்கு எமனாக சுற்றித்திரியும் எருமைமாடுகள் கண்டு கொள்ளப்படாததன் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

ஏரிகள் ஏரியாவாகிபோன சென்னையில்.... சாலைகள் மேய்ச்சல் நிலமாக மாறி போயிருக்கின்றது தலைநகரத்து மாடுகளுக்கு..!

காலையிலும் மாலையிலும் பாலைக் கறந்துவிட்டு அதற்கு வைக்கோலையோ புல்லையோ உணவாக சாப்பிட கொடுக்காமல் அவிழ்த்து விட்டு விடுகின்றனர் மாட்டின் உரிமையாளர்கள்.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூர், நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் சாலைகளில் வீடுகளின் அலங்காரச் செடிகளையும் புல்தரைகளையும் வேட்டையாடிவிட்டு, சிக்னல்களுக்கு இணையான சிக்கலாக வலம் வருகின்றன இந்த மாடுகள்!

வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் உள்ளிட்ட பகுதிகளின் சாலைகளிலும் கேட்பார் யாரும் இல்லாததால் சுதந்திரமாக சுற்றித்திரியும் மாடுகளுக்கு ஏற்ப வாகனத்தை இயக்கும் தர்ம சங்கடத்திற்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர்

சில மாடுகள் போகிற போக்கில் கார்களை தங்கள் கொம்பால் சேதப்படுத்தி சில ஆயிரங்களை செலவிழுத்துவிட்டு விட்டு செல்வதால், மாடுகள் மீது உரசி விடக்கூடாது என்று வாகன ஓட்டிகள் சாலையில் பதினொன்று போடும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதற்கெல்லாம் உச்சகட்டம் மாதவரம் பைபாஸ் சாலைதான்..! இங்கு சாலையில் ஒருபுறம் இருந்து மறுபுறம் பாசக்கயிறில்லா எமன் போல வாகன ஓட்டிகளை மிரட்டியபடி கடந்து செல்கின்றன எருமைமாடுகள், மணலி புது நகர் பகுதிகளில் இரவானால் மாடுவளர்ப்போர் அவற்றை அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அது வீடுகளில் வளர்க்கும் மரம் செடிகொடிகளை மேய்ந்து விட்டு சாலை நடுவில் படுத்துக் கொண்டு மறியல் செய்து வருகின்றன

இந்த சாலையில் படுத்து கிடக்கும் மாடுகள் சில சமயம் ஒலி எழுப்பினாலும் அசைந்து கொடுக்காமல், நந்தி சிலை போல அப்படியே அமர்ந்து கொண்டு அடம் பிடிப்பதையும் காணமுடிகின்றது.

சாலைகளை சாணத்தால் நிறைக்கும், இந்த மாடுகளால் இரு சக்கரவாகன ஓட்டிகள் சறுக்கி விழும் நிகழ்வுகள் அதிகம் நிகழ்கின்றன. சென்னை மாநகர சாலையில் மாடுகளை அவிழ்த்து விட்டால் மாடு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் மாட்டின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் வாகன ஓட்டிகள்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணியில் இருப்பதால் மாடுகளை தடுக்க இயலாமல் தவிப்பதாகவும் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

பேனர் விழுந்து ஒரு பெண் பலியான பின்னர் பேனர்களை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது போல இல்லாமல், சாலையில் சுற்றித்திறியும் மாடுகளால் ஏதாவது உயிர்பலியாகும் முன்பாக மேய்ப்பாரின்றி சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments