ரவுடியை பிடிக்கச் சென்றபோது குண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட காவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி..!

0 3863

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இரட்டைக் கொலை வழக்கில் பதுங்கியிருந்த ரவுடியை பிடிக்கச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி துரைமுத்து முறப்பநாடு காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்த சிறப்புப் படையில் பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த காவலர் சுப்பிரமணியன் என்பவரும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் ரவுடி துரைமுத்து பதுங்கியிருப்பதை அறிந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

அப்போது தப்பி ஓடிய ரவுடி துரைமுத்துவை, காவலர் சுப்பிரமணியன் குண்டுக்கட்டாக மடக்கி பிடித்த போது இருவரும் தரையில் கட்டிப்புரண்டு உருண்டதாகவும், அப்போது ரவுடி மஞ்சள் பையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து போலீஸ்காரர் சுப்பிரமணியனின் தலை சிதறியதாகவும், இதில் துரைமுத்துவுக்கும் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்தாகவும் விளக்கம் அளித்துள்ள போலீசார், துரைமுத்துவின் கூட்டாளிகள் 3 பேரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காவலர் சுப்பிரமணியனின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவும், நிலைமையை அறியவும் டிஜிபி திரிபாதி தூத்துக்குடி விரைந்துள்ளார். இந்நிலையில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments