காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொன்ற ரவுடி துரைமுத்து என்கவுன்டர் ?
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இரட்டை கொலை வழக்கில் பதுங்கியிருந்த ரௌடியை பிடிக்கச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொல்லப்பட்ட நிலையில், ரவுடியும் வெடிகுண்டு வீச்சுக்கு பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த ரவுடி துரைமுத்து என்பவன் முறப்பநாடு காட்டுப்பகுதியில் கொலைத் திட்டத்துடன் பதுங்கி இருக்கும் தகவல் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் சிறப்பு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்த சிறப்புப் படையில் பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த காவலர் சுப்பிரமணியன் என்பவரும் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் ரவுடி துரைமுத்து பதுங்கியிருப்பதை அறிந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். வனப்பகுதியில் கூட்டாளியுடன் பதுங்கியிருந்த துரைமுத்துவை சரணடைய கூறியபோது மறுத்த அவன், போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தப்ப முயன்றான்.
இதில் காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே தலை சிதறி உயிரிழந்ததாகவும், வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்துவை போலீசார் என்கவுண்ட்டர் செய்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், அதனை மறுத்துள்ள போலீசார், தப்பி ஓடிய ரவுடி துரைமுத்துவை காவலர் சுப்பிரமணியன் குண்டுக்கட்டாக மடக்கி பிடித்த போது இருவரும் தரையில் கட்டிப்புரண்டு உருண்டதாகவும், அப்போது ரவுடி மஞ்சள் பையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து போலீஸ்காரர் சுப்பிரமணியனின் தலை சிதறியதாகவும், இதில் துரைமுத்துவுக்கும் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்தாகவும் விளக்கம் அளித்துள்ள போலீசார், துரைமுத்துவின் கூட்டாளிகள் 3 பேரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் பலியான காவலர் சுப்பிரமணியனுக்கு 10 மாத கைகுழந்தை இருப்பதாகவும் அவர்களது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசும் காவல்துறையும் செய்யும் என்று தெரிவித்தார்.
வெடிகுண்டு ரவுடி துரைமுத்து மீது ஏற்கனவே 4 கொலை வழக்குகள் உள்ள நிலையில் காளி என்பவரை 5ஆவதாக கொலை செய்யும் திட்டத்துடன் வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சக்திவாய்ந்த இந்த நாட்டு வெடிகுண்டுகளை தயாரிக்க வெடிமருந்து எங்கு வாங்கப்பட்டது ? அதனை தயாரித்து வழங்கியவர்கள் யார்? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் உயிருக்கு அச்சுறுத்தலாக வலம் வரும் ரவுடிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments