டெல்லி ஷாகீன் பாக்கில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக போராடியவர்களில் 200 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக தகவல்..!

0 3168

டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீவிரமாக போராடியவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டெல்லியில் கடந்த ஜனவரி மாதத்தில் சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அதில், ஷாகீன்பாக் என்ற இடத்தில் ஏராளமான பெண்களும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பல தன்னார்வலர்கள் பின்னால் இருந்து இயக்கினர்.

கிட்டத்தட்ட 101 நாள்கள் நடந்த இந்த போராட்டம் கொரோனா பரவல் காரணமாக உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், ஷாகீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் டெல்லி பாரதிய ஜனதா கட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இணைந்துள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்களில் சமூக சேவகர் ஷாஷாத் அலி, டாக்டர். மெக்ரின் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தபாஸம் ஹூசைன் ஆகியோர் முக்கியமானவர்கள் என்று சொல்லப்படுகிறது. 

ஷாகீன் பாக் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரவ் பரத்வாஜ் நேற்று கூறுகையில், '' ஷாகீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததில் ஆச்சரியமில்லை டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்துக்காக பாரதிய ஜனதா கட்சியால் திட்டமிட்டு ஷாகீன்பாக் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை பின்னணியில் இருந்து இயக்கியதே பாரதிய ஜனதா கட்சிதான் '' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் மனோஜ் திவாரி,'' பாரதிய ஜனதா கட்சி மதம், சாதி, இன அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை . இஸ்லாமிய சகோதர சகோதரிகள் பாரதிய ஜனதாவுடன் கைகோத்து நடக்க விரும்புகிறார்கள் . அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் மக்களை பிரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய கட்சியான பாரதிய ஜனதா அனைத்து மதங்களையும் சமமாகவே பாவிக்கிறது'' என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments