ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, கடந்த 2018 மே மாதம் 28 -ந் தேதி அந்த ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது.
தமிழக அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலின் விசாரணை அறிக்கையில், அந்த ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டதை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளித்தது
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க இடைக்காலத் தடை விதித்தது. அத்துடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.
அதன்படி, ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, 39 நாட்களாக நடந்த விசாரணையின் முடிவில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்தவழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு இன்று வழங்குகிறது.
Comments