'மத துவேசத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது! '- விநாயகர் சிலைகளை பெண் உடைத்த விவகாரத்தில் பக்ரைன் அறிவிப்பு

0 32561

விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுக்க வாழும் இந்து மக்கள் விநாயகர் சிலைகளை வாங்கி பூஜை செய்வது வழக்கம் . பக்ரைன் நாட்டிலும் 4 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். 2010- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 9.8 சதவிகித இந்துக்கள் இந்த குட்டி நாட்டில் வசிக்கின்றனர். இதனால், அந்த நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டி வருகிறது. மார்கெட்டுகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பக்ரைன் தலைநகர் மனமாவின் புறநகர் பகுதியாள சூஃபைர் என்ற இடத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த சூப்பர் மார்கெட்டுக்கு வந்த பெண்கள் இருவர் அங்கு விற்பனைக்கு விநாயகர் சிலைகளை கண்டு கோபமடைந்தனர். அதில், ஒரு பெண் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கோபத்துடன் எடுத்து தரையில் போட்டு உடைத்தார்.

மேலும், 'இது நபிகள் பிறந்த மண்... இங்கு இது போன்ற விஷயத்தை அவர் அனுமதிப்பாரா? என்று அராபிய மொழியில் கோபமாக அவர்  கத்தினார். விநாயகர் சிலைகளை அந்த பெண் உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலனாது. இதையடுத்து, விநாயகர் சிலைகளை உடைத்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ குறித்து, பக்ரைன் போலீஸ் ஆய்வு செய்தது. வீடியோவில் 54 வயதான பெண் ஒருவர் வேண்டுமென்றே சிலைகளை சேதப்படுத்தியது உறுதி படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து  அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். மத துவேசத்தை பரப்பும் செயலை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்ரைன் மன்னரின் ஆலோசகரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான காலித் அல் கலீஃபா தன் ட்விட்டர் பதிவில் ,'அந்த பெண்ணின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. மத துவேஷத்தை பரப்புவது பஹ்ரைன் மக்களின் இயல்பு அல்ல.. பக்ரைனில் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்கின்றனர் " என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments