எல்லையில் முன்பிருந்த நிலை.. நிலைப்பாட்டில் இந்தியா உறுதி..!
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து படை விலக்கத்துக்கான சீனாவின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்பதிலும், முன்பிருந்த நிலையைப் பராமரிப்பது என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது.
இந்தியா - சீனா இடையே எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க இருநாடுகளின் ராணுவ அதிகாரிகள் நிலையிலான பல சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளது. இருப்பினும் இப்போதுள்ள நிலைகளில் இருந்து பின்வாங்க முடியாது எனச் சீனா விடாப்பிடியாக உள்ளதால், பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாங்காங் சோ, கோக்ரா ஆகிய இடங்களில் கண்ணாடி இழைத் தொலைத்தொடர்பு வடங்களைப் பதிக்கச் சீனா திட்டமிட்டுள்ளது.
இதனால் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் முன்பிருந்த நிலையைச் சீனா பராமரிக்கும் வரை, குறிப்பிட்ட நிலைகளில் படையினரை நிறுத்தி வைக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. லடாக்கிலும், சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அக்சாய் சின் பகுதியிலும் சீன விமானப் படையின் செயல்பாடுகள் குறைந்துள்ளபோதும், ஆயிரத்து 597 கிலோமீட்டர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீன ராணுவம் பலத்தைப் பெருக்குவதால், பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதனால் சியாச்சினில் பாகிஸ்தான் ஊடுருவலுக்கு எதிராகப் படைகளை நிலைகொள்ளச் செய்ததுபோல், லடாக்கில் சீனாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் நிலையில் ஒருதரப்பாகச் செய்யப்படும் எந்த மாற்றத்தையும் இந்தியா ஏற்காது என இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்க இந்தியா தயார் எனச் சுதந்திர நாள் உரையில் பிரதமர் மோடி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Comments