பேனா பிடிக்கும் பிஞ்சு கையில் மண்வெட்டி...! மாணவர்கள் மாற்று பணி
அரசு தொடக்கப் பள்ளிகள் இயங்காததால், மாணவர்கள் தங்கள் பெற்றொருடன் வயல்வேலைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பேனா பிடிக்க வேண்டிய கையில் கொரோனா ஊரடங்கால் மண்வெட்டி பிடித்த பிஞ்சுகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கையில் பேனா பிடித்து எழுத வேண்டிய வயதில் பள்ளிகள் மூடப்பட்டதால் மண்வெட்டி பிடித்து, சேற்றில் இறங்கி, தந்தைக்கு உறுதுணையாக விவசாயப் பணிகளில் ஈடுபடும் இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள்..!
சூளகிரி அடுத்த கஞ்ஜூர் பகுதியை சோமசேகர் - லாவண்யா தம்பதியரின் 8 வயது மகனான ராம் சரணும், 6 வயது மகனான் மனோஜும் தான் தினமும் தங்கள் பெற்றோருடன் வயலுக்குச் சென்று அங்கு பயிரிடப்பட்டுள்ள கொத்தமல்லி மற்றும் புதினா செடிகளுக்கு முறையாக தண்ணீர் பாய்ச்சும் வேலைகளை செய்து வருகின்றனர்.
பள்ளிப் பாட புத்தகப் பையை முதுகில் சுமந்து பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய சிறுவன் ராம் சரண், பூச்சி மருந்து தெளிப்பானை கட்டிக் கொண்டு செடிகளுக்கு மருந்து தெளிக்கின்றான்..!
சகோதரர்கள் இருவரும் தாய்க்கு துணையாக வயலில் இறங்கி நெல் நாத்துக்கட்டுகளை இழுத்து சென்று கொடுப்பதையும், நாத்து நடும் காட்சிகளையும் பார்க்கும் போது, மீன் குஞ்சுகளுக்கு நீந்த கற்றுக் கொடுக்கவேண்டுமா என்பது போல இருக்கின்றது.
விவசாயி பயிர் செய்ய சேற்றில் கால்வைத்தால் தான் நாம் உயிர் வாழ சோற்றில் கைவைக்க முடியும் என்பதை இந்த சிறுவர்களின் விவசாயப்பணி நமக்கு உணர்த்தினாலும், தனியார் பள்ளி மாணவர்கள் எல்லாம் ஆன்லைனில் கல்வி கற்றுக் கொண்டிருக்க, ஏழை எளியோர் வீட்டு பிள்ளைகள் திறக்காத அரசு பள்ளிகளால் இந்த ஆண்டு கல்வியில் பின் தங்கிவிடுமோ ? என்ற ஏக்கம் வந்து தொற்றிக் கொள்வதை தவிர்க்க இயலவில்லை.
கொரோனா ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கும் வரை பெரும்பாலான கிராமப்புற மாணவர்களின் நிலை வயலும் வாழ்வும் என்பதே கசப்பான உண்மை..!
Comments