' தந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்'- எஸ்.பி.பி சரண்
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நல்ல முன்னேற்றம் கண்டுவருவதாக அவரின் மகன் எஸ்.பி சரண் கூறியுள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால், உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.. தற்போது 74 வயதான அவருக்குக் காய்ச்சல், சளி ஏற்பட்டதால் இந்த மாதம் 5 - ம் தேதி கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். சோதனையில் அவருக்குக் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான காய்ச்சல் மட்டும் இருந்ததால் வீட்டிலேயே ஓய்வெடுக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால், வயோதிகம் காரணமாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறத் தொடங்கினார் எஸ்பிபி. இந்த நிலையில், எஸ்.பி.பி. சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று வரை நல்ல உடல் நலத்துடன் இருந்த எஸ்.பி. பியின் உடல்நிலை நேற்றிரவு முதல் மோசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது, உடல் நிலை மோசமாகியிருப்பதால் எஸ்.பி.பி. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், எஸ்.பி.பி.யின் உடல் நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாக அவரின் மகன் எஸ்.பி.பி. சரண் கூறியுள்ளார்.
''நேற்று மாலை முதல் அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் சிரத்தையெடுத்து அவரை கவனித்து கொண்டு வருகின்றனர். கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. விரைவில் எஸ்.பி.பி. பூர்ண குணமடைவார் '' என்று எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் சகோதரி எஸ்.பி. வசந்தா கூறுகையில்,'' எங்களின் நலம் விரும்பிகளின் பிரார்த்தனையுடனும், கடவுளின் கிருபையுடனும், என் சகோதரர் விரைவில் குணமடைவார்,கூடுதல் பலத்துடன் அவர் வீடு வருவார்'' என்று கூறியுள்ளார்.
Comments