வீட்டில் சும்மா இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, என்ன பணி வழங்கலாம் ? பொதுமக்கள் கருத்து
தமிழகத்தில் 4 மாதங்களுக்கு மேலாக பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாதம் 2000 கோடி ரூபாயை சம்பளமாக பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தாமாக முன்வந்து கொரோனா காலத்தில் அரசுக்கு உதவியாக மாற்று பணியில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் சாமானிய மக்கள் போதிய வருமானமின்றித் தவிக்கும் நிலையில், கடந்த 4 மாதங்களாக, வேலைக்கே செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாதந்தோறும் 2 ஆயிரம் கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுவருகின்றனர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
இவர்களின் சம்பளத்தை குறிப்பிட்ட சதவீதம் குறைத்து, அதில் வரும் மீதித் தொகையை வருமானமிழந்து தவிக்கும் ஏழை- எளிய மக்களுக்கு பிரித்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பணிக்குச் செல்லும் சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தவிர்த்து, வேலைக்கே செல்லாத பல அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களை, அரசின் இ.சேவை மையம் மற்றும் நல வாரிய அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் தற்காலிகமாக மாற்றுப்பணி வழங்கினால் அரசுப் பணிகள் தடையின்றி நடக்கும் என்பதோடு, அரசுப் பணமும் வீணாகாது என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாத் தரப்பு மக்களுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும் ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படுவது சரியான நடவடிக்கையா ? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்
முன்பெல்லாம் பள்ளி நேரம் போக, மாணவர்களுக்கு வீட்டில் டியூசன் நடத்தி, இரட்டை சம்பளம் பார்த்துவந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தற்போது வீட்டில் டியூசன் எடுக்க முடியவில்லையே என்பது மட்டுமே பாதிப்பு என்று சிலர் வறுத்தெடுக்கின்றனர்
வீட்டிலேயே இருக்கும் ஆசிரியர்களுக்கு, அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு மருத்துவ மனைகளில் மாற்றுப்பணிகள் வழங்கலாம் , கொரோனா ஆய்வக ரிசல்ட்டை பதிவு செய்யும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கோ, மக்கள் தொகை கணக்கெடுப்புக்குச் செல்வது போல வீடுவீடாக கொரோனா சோதனைக்கோ செல்ல அறிவுறுத்தினால், அந்த பணிக்கு புதிதாக ஆட்களைத் தேர்வு செய்து அரசின் நிதி சம்பளமாக வீணாவதை தவிர்க்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளனர்
தமிழகத்தைப் பொறுத்தவரை நிர்வாகம் மற்றும் ஆன்லைன் கல்விப் பணிக்காக 25 சதவீத ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு சென்றுவருவதாக எடுத்துக் கொண்டால் கூட, மீதமுள்ள 75 சதவீத ஆசிரியர்களுக்கு அரசு விதிகளின்படி வேலை செய்யாத நாட்களுக்கான சம்பளத்தை முழுமையாக ரத்து செய்ய சட்டத்தில் இடம் உள்ளதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்கள் எப்போது செல்வார்கள் ? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
அரசின் நிதி நிலையை உணர்ந்து, மனித நேயத்துடன் தங்களாகவே முன்வந்து சம்பளத்தை விட்டுக் கொடுப்பார்கள் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆனால் பணி ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கடந்த பின்னரும் ஆசிரியர் என்ற பெயரில் சங்கம் நடத்திவரும் மாயவன் என்பவர், உலகமே போற்றும் உன்னத பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் நீட் தேர்வில் ஒரு மாணவரைக் கூட தங்கள் கல்வித் திறனால் தேர்ச்சி அடைய வைக்க இயலாத அரசுப பள்ளி ஆசிரியர்கள், குற்றஞ்சாட்டுவோர் மீது பாய்வதை விடுத்து, இந்த ஆண்டாவது நீட் தேர்வில் ஏழை எளிய மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து அவர்களின் மருத்துவகனவை நிறைவேற்றி அளப்பறிய தியாகங்கள் மூலம் அரசு பள்ளி ஆசிரியர்கள் உண்மையிலேயே இமயமலை போல உயர்ந்து நிற்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதே வேளையில், 10 ஆம் வகுப்பு போல நீட் தேர்வில் ஆல்பாஸ் உத்தரவு வரவாய்ப்பில்லை என்பதையும் அரசு பள்ளி ஆசிரியர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
Comments